2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2016 ஜனவரி 01 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை (01) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

பருத்தித்துறையிலிருந்து – திருகோணமலை சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் மீது வியாழக்கிழமை (31) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட போத்தல் தாக்குதலை கண்டித்து இந்த ஆர்;ப்பாட்டம் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகிய இந்த ஆர்ப்பாட்டம் ஆஸ்பத்திரி வீதி வழியாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்தது. அங்கு மேலதிக மாவட்டச் செயலர் பா.செந்தில்நந்தனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் உபாலி ஹிருபத்கொடுவ, ' வடமாகாணத்தில் இதுவரையில் இலங்கை போக்குவரத்து சபையின் 57 பஸ்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால் பஸ் சேவை நடத்தாமல் போராட்டம் நடத்துவோம்' என்றார்.

'கிளிநொச்சி சாலை முகாமையாளரைத் தாக்கச் சென்றுள்ளனர். மன்னாரிலுள்ள பஸ் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, சாரதி கண்ணில் படுகாயமடைந்தார். எமது பஸ்கள் தொடர்ந்தும் தாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. தனியார் துறையினர் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். பஸ்ஸில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்பு குறித்து அவர்களின் குடும்பத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் நாங்கள். அவர்கள் எங்களிடம் கேள்விகள் கேட்கின்றனர். தொழிற்சங்கங்களும் எங்களைக் கேள்வி கேட்கின்றன.

மாவட்டச் செயலாளர், வடமாகாண மற்றும் மத்திய போக்குவரத்து அமைச்சர்கள், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் என பல்வேறு தரப்பினர்களுக்கும், இந்தச் சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தோம். அவர்கள் தடுத்து நிறுத்தாவிடின் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தாமல் போராட்டம் செய்வோம்' என்றும் அவர் கூறினார்.

'வடமாகாணத்தில் போக்குவரத்துச் சபையின் 250 பஸ்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுகின்றனர். ஆனால் சுமார் 1,500 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன. எங்களிடமுள்ள கொஞ்ச பஸ்களை வைத்து மக்களுக்கு சேவை வழங்குவதற்கு ஏன் விடுகின்றீர்கள் இல்லை. எங்களுடன் தனியார் துறையினர் ஏன் போட்டிக்கு வருகின்றனர். இதுவரையில் எந்தவொரு தனியார் பஸ்ஸும் சேதமாக்கப்படவில்லை' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X