Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 30 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
“ஜெனிவா சென்று, இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்று பேசியவர் தான் டக்ளஸ் தேவானந்தா. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், ஜெனிவாக்கு சென்று இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றியவர்” என, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம், நேற்று (29), மானிப்பாயில் நடைபெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், “சிங்கள பகுதியில் ஏற்கெனவே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கின்றார். தேர்தல் முடிவடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக வர இருக்கின்றார். அவ்வாறு இருக்கக் கூடிய அரசாங்கம் எவ்வாறு இருக்கும் என்பது எல்லோருக்கும் வெளிப்படும்” என்றார்.
“கடந்த காலத்தில், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தார். கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்தார். இவர்களுடைய ஆட்சிக் காலத்தில் தான் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். பல இளைஞர், யுவதிகள் காணாமலாக்கப்பட்டார்கள். இன்று அதே ஆட்சி மீண்டும் வருகின்றது. கோட்டாபய ராஜபக்ஷ தான் முழுக்க முழுக்க சிங்கள வாக்குகளாளே தெரிவு செய்யப்பட்டவன் என்பதை தெளிவாக கூறியிருக்கின்றார். ஆகவே, அவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பது வெளிப்படையானது” எனவும், அவர் கூறினார்.
“இந்தத் தேர்தலில் களமிறங்கி இருப்பவர்கள் தமிழ் மக்களுடைய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவார்களா? சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவார்களா? அது பற்றி பேசுவார்களா? அமைச்சர்களாக வந்தால் தடுத்து நிறுத்துவார்களா? கடந்த காலத்தில் இவர்கள் அமைச்சர்களாக இருந்தபொழுது அரசாங்கம் என்னவெல்லாம் செய்தார்களளோ அதற்கு ஆமாம் சாமி போட்டார்களே தவிர அதற்கு எதிராக செயற்பட்டதில்லை.
“டக்ளஸ் தேவானந்தா ஜெனிவா சென்று இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்றுதான் பேசினார். பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், ஜெனிவாக்குச் சென்று இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றியவர் அவர். நாங்கள் நம்பி வாக்களித்தக் கூட்டமைப்பினரும் இன்று தமது கொள்கைகளில் இருந்து விலகி இன்று அவர்களும் அமைச்சர்களாவதற்கு தங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு மக்களிடம் வாக்கு கேட்கின்றார்கள்” எனவும், சுரேஷ் தெரிவித்தார்.
தமிழ் மக்களுடைய அபிவிருத்திக்கான அமைச்சுப் பதவியா? அல்லது தமது சொந்த குடும்பங்களுக்கான அமைச்சுப் பதவியா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டுமெனத் தெரிவித்த அவர், யாருடைய அபிவிருத்திக்காக அமைச்சுப் பதவியைப் பற்றிப் பேசுகின்றீர்களெனவும் அப்படியாக இருந்தால் கடந்த காலத்தில் கூறிய அனைத்தும் பொய்யான ஒன்றா எனவும் வினவினார்.
“தமிழ் மக்களுக்கான இன விடுதலை, தமிழ் மக்களுக்கான அதிகாரம், புதிய அரசியல் சாசனம் போன்று பல விடயங்களைப் பற்றி பேசினார்கள். உண்மையாகவே நேர்மையானவர்களாக இருந்திருந்தால் கடந்த ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்துடன் சேர்ந்திருந்த காலத்தில் மக்களுடைய சில பிரச்சினைகளைக் கூட தீர்த்திருக்க முடியும்.
“அது மட்டுமல்லாது, புதிய அரசியல் சாசன இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். தமிழ் மக்களுக்கான அடிப்படை விடயங்களை உள்ளடக்காமல் அரசியல் சாசனத்தை கொண்டு வந்து என்ன பிரியோசனம். தென்னாபிரிக்காவின் விடுதலையின் பொழுது அன்றிருந்த ஜனாதிபதிக்கும் நெல்சன் மட்டேலாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
“எவ்வாறு பிரச்சினைகளை தீர்த்து கொள்வது என பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் ஓர் அங்கமாக கறுப்பின மக்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னரே அரசியல் யாப்பு பற்றி பேசினார்கள் அதன் பின்னரே அங்கு யாப்பு தயாரிக்கப்பட்டது.
“ஆனால், இங்கு ஆளும் தரப்புகளுக்கும் தமிழ் பிரதிநிதிகளுக்குமிடையில் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. இன்று அரசியல் சாசனமும் இல்லை. ஆனால், சம்பந்தன் ஐயா இன்று சொல்லுகின்றார் நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று.
“நான் சம்பந்தன் ஐயாவிடம் ஒன்று கேட்க விரும்புகின்றேன். சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து அரசியலில் இருப்பவர், சட்டத்தரணி இவ்வாறான ஒருவர் கூறுகின்ற பதிலா இது. அது மாத்திரமல்லாமல் சில சந்தர்ப்பங்களை இழந்து விட்டோம் என கூறுகின்றார். அரசியலில் ஒரு சில சந்தர்ப்பங்கள் கிடைக்கும் அதனை பயன்படுத்த வேண்டும். தவற விடுவோமாக இருந்தால், இன்னொரு சந்தர்பத்துக்கு காவல் இருக்க நேரிடும்.
“ஆகவே, கூட்டமைப்பினர் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைப் பற்றி பேசாது, தமது சொந்த நலன்களிலேயே கடந்த காலங்களில் அதிக அக்கறை காட்டியிருக்கின்றார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது” எனவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago