2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

’இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு நீதி காணப்படவேண்டும்’

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன், நிதர்ஷன் வினோத், எஸ்.என் நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன், டி.விஜித்தா, க. அகரன், எஸ்.றொசேரியன் லெம்பேட்

நீர் இல்லாமல் மீன்கள் இறந்துவிடுவது போல, சட்டமும் ஒழுங்கும் இல்லாத சமூகத்தில் உரிமைகள் இல்லாமல் மனிதன் இறந்து  விடுகின்றான். சமாதானத்தை விட உரிமைகளே பெறுமதியானவை. எனவே, இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு  நீதி காணப்படவேண்டுமென வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

மேலும், போரில் இறந்தவர்களுக்கு விளக்கேற்றக்கூட அனுமதி இல்லை என்றால் இங்கு எவ்வாறான மனித உரிமை மீறல் நடந்திருக்கும் என்பதை இலகுவாக கண்டறியலாம் எனவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று (10) வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார்மாவட்டங்களில் மேற்படி அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

கிளிநொச்சி, கந்தசுவாமி கோவில் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போதே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்படி தெரிவித்தனர். 

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை எல்லா தரப்பினரிடமும் வலியுறுத்துவதே மனித உரிமை நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம். மனித உரிமை என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல யாராலும் யாருக்கும் வழங்கப்பட்டதும் அல்ல. ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும் அவனிடம் பிறந்ததுதான் மனித உரிமை. அதனால் ஒருவரின் உரிமையைப் பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

“கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமையின் பிரதிபலிப்பு மரணங்கள், பாலியல் வன்முறைகள், நிலங்கள் மற்றும் உரிமைகள் பறிப்பு என இலங்கை விளங்குகிறது .

“வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை ஐக்கிய நாடுகள் சபை வழிகாட்டலில் நடத்தப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பின் வழி அனைத்துலக சமூகம் அங்கிகரிக்க வேண்டும்.

“நாட்டில் நடைபெற்ற சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படுதல், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களை சர்வதேச நியாயாதிக்க கொள்கைகளை பயன்படுத்தி, விசாரணை செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பரிந்துரை செய்யவேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X