2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘இழுவை மீன்பிடி சட்டமூலத்தில் மாற்றம் வேண்டும்’

Editorial   / 2017 ஜூலை 04 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வழங்கப்பட்ட உறுதிமொழிக்கமைய இழுவை மடி படகு மீன்பிடி முறைமை தொடர்பான சட்டமூலத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.

குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தில், இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சங்கத்தினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சங்கத்தினர் மேலும் தெரிவிக்கையில்,

தனிநபர் பிரேரணையாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட இழுவைப் படகுகள் தொடர்பான சட்ட மூலம், நாளை மறுதினம் (06) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், இழுவை மடி முறை மூலம் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவ குடும்பங்கள் தொடர்பில் பிழையான செய்திகள் பரவிக் கொண்டுள்ளது. ஆகவே சரியான தகவல்களை அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும்.

இழுவை மடி தொழிலை 1976ஆம் ஆண்டு நாங்கள் அனைவரும் ஆரம்பித்தோம். இதற்கு முன்னர் தென்னிந்திய மீனவர்களின் இழுவை மடி காரணமாக, எமது கடல் வளத்தை இழக்க நேரிட்டது. அப்போது ஆட்சியில் இருந்த ஐ.தே.க அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சர் தான் இந்தத் தொழில் முறையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதனால் இந்திய மீனவர்கள் அள்ளிச் செல்லும் ஒரு பகுதி கடல் வளத்தை எம்மாலும் பெற்றுக்கொள்ள முடிந்தது.

யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில், இந்திய மீனவர்கள் மீண்டும் எமது கடற்பரப்பில் இழுவை மடி மூலம் தொழில் செய்தனர். யுத்தம் உக்கிரமடைந்த போது 300 வரையான இழுவை மடி படகுகள் அழிக்கப்பட்டு எமது வாழ்வாதாரம் கேள்விக்குட்படுத்தப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் தொழிலுக்கு அனுமதி கிடைத்த பின்னரும் அழிவடைந்த படகுகளுக்கு எந்த நஷ்ட ஈடும் இதுவரை எந்த அரசாங்கத்தாலும் வழங்கப்படவில்லை.

எனினும் தற்போது எமது முயற்சியின் காரணமாக, 325 படகுகளில் தொழில் செய்து வருகின்றோம். இந்த இழுவை மடி படகு மூலம் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எமது பிரதேசத்தில் மாத்திரம் நேரடி பங்காளர்களாக இருந்து வருகின்ற நிலையில், இந்தச் சட்டமூலம் நாளை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், இந்தக் குடும்பங்களின் நிலை என்ன? வீதியிலா நிற்பது? எங்களால் மேற்கொள்ளப்படும் இந்த தொழில்முறை மூலமாக எந்த அழிவும் நடைபெறவில்லை.

குறிப்பாக இத்தொழிலால் கடற்பாறை, பவளப்பாறைகள் அழிவடைந்துவிடும் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. எனினும் இவ்வாறான இடங்களில் இழுவை மடி செய்ய முடியாது. இறால் வகை, கடலில் உள்ள சேற்று நிலங்களில் தான் வாழ்கின்றன. நாம் தொழிலில் ஈடுபடும் இடங்களில் கடற்பாறை இல்லை. எனவே கடற்பாறை அழிவடையாது. வாரத்தின் மூன்று நாட்களில் மட்டுமே இந்த மீன்பிடி முறையை மேற்கொண்டு வருகின்றோம்.

பேசாலை, குருநகர் மக்களும்தான் இழுவை மடித் தொழிலை அதிகளவில் மேற்கொள்ளுகின்றனர். இந்த மீனவர்கள் சேற்றுப்பாங்கான கடல்களில் தான் தொழில் செய்கின்றனர். எமது பிரதான கடல் மையம் நெடுந்தீவிலிருந்து கச்சதீவை நோக்கியதாகும். எம்மால் பாதிப்பு ஏற்படுவதாக நெடுந்தீவு மீனவர்கள் முறையிட்டதையடுத்து, நெடுந்தீவிலிருந்து ஐந்து கடல் மைல்களுக்கு அப்பால் தொழில் செய்வது என இணக்கம் காணப்பட்டது. இவற்றை மீறுபவர்களுக்கு எந்தத் தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம் அதனை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம்.

இந்தத் தொழில் மூலம் அறுவடை செய்யும் இறால் வகைகள் பாரியதொரு வளமாக உள்ளது. இந்த அந்நிய செலாவணியை கைவிடப் போகின்றோமா? ஆகவே, இறால்கள் பிடிப்பதற்கு மாற்று ஏற்பாடுகள் ஏதும் செய்தால் கைவிட தயாராக உள்ளோம். 1974ஆம் ஆண்டிலிருந்து இறால் அறுவடை அதிகரித்து கொண்டுள்ளதே தவிர குறைவடையவில்லை. 6 மாத காலம் மட்டுமே உயிர்வாழக்கூடிய இந்த இறாலை அழிய விட போகின்றோமா? 28 அடி நீளமான படகுகளைச் செய்தும் தொழில் ஈடுபட்டோம். தற்போதும் மனித வலுவை பயன்படுத்தி பாரம்பரிய முறையில் தான் இன்றும் இழுவை மடி தொழிலை செய்து வருகின்றோம். ஆனால் தென்னிலங்கை மீனவர்கள் இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர்.

இதே போன்று 7 ஆயிரம் விசைப்படகுகளை தமிழ் நாட்டு மீனவர்கள் வைத்துள்ளார்கள். இவர்கள் பிடித்த மிச்சத்தை தான் நாங்கள் பிடிக்கின்றோம். எமது கடல் வளத்தை பாதுகாக்க, தமிழ் நாட்டு மீனவர்கள், தென்னிலங்கை மீனவர்களை இந்தச் சட்டமூலம் கொண்டு எங்கள் கடற்பரப்பில் இழுவை மடி செய்வதை தடைசெய்வது வரவேற்கத்தக்கது. எமது கடற்பரப்பை வேறு யாரும் பயன்படுத்த முடியாது.

கடந்த இரண்டாம் திகதி, இந்தச் சட்டமூலம் தொடர்பாக, விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடலில், குறித்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும் எனக் கூறினார்கள். இதன்போது உள்ளூர் மீனவர்களுக்காக சில திருத்தங்களை கேற்கொள்வதாக உறுதியளிக்கப்பட்டது. இதற்கு முன்னர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் உறுதியளித்திருந்தார். ஆகவே எங்களுக்கு கூறப்பட்ட விடயங்கள் அந்த சட்ட மூலத்தில் உள்வாங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

 

                                

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X