2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

ஈ.பி.டி.பி உறுப்பினர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

எம். றொசாந்த்   / 2018 ஏப்ரல் 27 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களான செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன் மற்றும் நடராஜா மதனராஜா அல்லது மதன் ஆகிய இருவரையும் லண்டனிலிருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாதுகாப்பு அமைச்சுக் கேட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா உள்ளிட்டவர்கள் மீது ஈ.பி.டி.பியினரால் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலின் போது கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன் மற்றும் அன்ரன் ஜீவராசா அல்லது ஜீவன் ஆகிய மூவருக்கும் இரண்டைத் தூக்குத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

இந்த வழங்கு விசாரணை நடைபெற்ற போது, செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன் ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருந்தனர். வழக்கின் தீர்ப்பு 2016ஆம் ஆண்டு டிசெம்பர் 7ஆம் திகதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன் இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், வெளிவிவாகார அமைச்சு, நீதி அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் மா அதிபர் திணைக்களம் ஆகிய இணைந்து இந்தக் குற்றவாளிகள் இருவரையும் நாடு கடத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியிருந்தது.

இந்த நிலையில் லண்டனில் வதியும் செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன் ஆகிய இருவரையும் நாடு கடத்தல் வழிமுறையில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாதுகாப்பு அமைச்சுக் கேட்டுள்ளது.

இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்கள மன்றாடியார் அதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் கடந்த 17ஆம் திகதி அனுப்பிவைத்த கடிதத்தின் பிரதி யாழ்ப்பாணம் மேல் நீதமன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .