2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

‘ஈ.பி.டி.பி மீதான விசாரணைக்கு, வடமாகாண சபை ஆதரவு வழங்கும்’

Editorial   / 2018 மார்ச் 28 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“யாழ்ப்பாணம் மாநகர சபை நிர்வாகத்தில் கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி செய்த ஊழல் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள, மாநகர சபை மேயர், விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஊழல் விசாரணைகளுக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஆதரவை வழங்குமென” வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். கந்தர்மடம் அரசடி வீதியில், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகம் நேற்று (27) திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சரிடம், ஈ.பி.டி.பி கட்சியுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றமை தொடர்பில், ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஈ.பி.டி.பி, கடந்த காலங்களில் யாழ்.மாநகர சபையில், செய்த ஊழல் தொடர்பில் தற்போது ஆட்சிப் பீடம் ஏறியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விசாரணைகளை செய்ய வேண்டும். அதில் உள்ள உண்மைகளை கண்டறிய வேண்டும்.

இது தொடர்பில் வடக்கு மாகாண சபையும் விசாரணைகளை மேற்கொள்ளும். இவ்விடயத்தை விசாரணை செய்ய ஏற்கனவே வடக்கு மாகாண சபையினால் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அக் குழு நடத்திய விசாரணைகளில் ஈ.பி.டி.பி கட்சியின் ஆட்சியில் யாழ்.மாநகர சபை நிர்வாகத்தில் ஊழல்கள் நடைபெற்று உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர்.

எனவே தற்போது ஆட்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஈ.பி.டி.பி கடந்த காலத்தில் செய்த ஊழல் தொடர்பில் முறையான விசாரணை செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .