2025 மே 17, சனிக்கிழமை

’எங்களுடைய அபிலாசைகளுக்கு உங்கள் நிலைப்பாடு என்ன?’

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தங்களுடைய தலைவிதியை தாங்களே தீர்மானிக்கின்ற ஆட்சி உரிமை தங்களிடம் வழங்கப்பட வேண்டுமென்பதற்காகவே, இந்த அரசாங்கத்துகு கடந்த நான்கு வருடங்களாக தங்கள் ஆதரவைக் கொடுத்தோமெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், ஆனால் அவ்வாறான தீர்வுக்கு பல முயற்சிகள் நடந்த போதிலும் அதை முடிவுக்கு கொண்டு வர முடியாத சூழ்நிலையில் நீங்கள் ஒரு பிரதமராக அல்லாமல் ஜனாதிபதி வேட்பாளராக அல்லாமல் முக்கியமான கட்சித் தலைவராக எங்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கு உங்கள் கட்சி நிலைப்பாடு என்னவெனவும் வினவினார்.

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் உரையாற்றும் போது, எம்.ஏ.சுமந்திரன்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

இது குறித்து அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இதுகால வரைக்கும் ஒரு பிரதமரும் இங்கு வந்ததில்லை. ஆனால் பிரதமராக ரணில் விக்கிரமிங்க வந்திருக்கின்றார் என்று நீங்கள் பெருமிதம் கொள்கிறீர்கள். இங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டமானது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டமாக அமைகிறது என்றார்.

இந்த பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்கின்ற போது, அரசில் இவர்கள் இருந்தாலும் கூட எதிர்க்கட்சியில் நாங்கள் இருக்கின்ற போது, எங்களுடன் கலந்தாலோசித்து, எங்களுடைய முன்மொழிவுகளைப் பெற்று செய்வது இதில் உள்ள விசேச தன்மையாகும். முன்னைய காலத்தில் இது நடந்திருக்கவில்லை எனவும், அவர் தெரிவித்தார்.

இன்றைக்கு பிரதமர் இங்கே வந்திருக்கிற கால சூழ்நிலையில், நாட்டிலே ஒரு தலைவரைத் தெரிவு செய்கிற தேர்தலை அண்மித்த காலப் பகுதியாகக் கருதப்படுகிறது. அதைக் குறித்து தான் பலருடைய கவனங்களும் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்று இன்னமும் அறிவிக்காத இந்தச் சந்தர்ப்பத்திலே, இன்றைக்கு பிரதமரை யாழ்ப்பாணத்தில் வைத்து, இந்த விடயம் சம்பந்தமாக சில கருத்துகளைச் சொல்வதற்கான கடைசி சந்தர்ப்பமாக இதை நான் கருதுகிறேன் எனவும், அவர் தெரிவித்தார்.

பொருளாதார நன்மைகள் பொருளாதார திட்டங்கள் எங்களுடன் கலந்தாலோசித்து, இப்பொழுது நடைபெறுகிறது என்று நான் சொன்னேன். ஆனால், இவற்றை நாங்களே தீர்மானித்து நாங்களே அமுல்படுத்தக் கூடிய ஓர் ஆட்சி உரிமை எங்களுடைய கையில் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான், எங்களுடைய அபிலாசையாக தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கிறதெனவும், அவர் கூறினார்.

எங்களுடைய தலைவிதியை நாங்களே நிர்ணயிக்கக் கூடிய விதத்திலே எங்களுடைய அதிகாரம் எங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் அந்த அபிலாசையாக இருந்த வந்திருக்கிறது. நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திலே கடந்த நான்கு வருடங்கள் செயற்பட்ட போது, பொருளாதார நன்மை எங்களுக்கு இப்படியாக கிடைக்க வேண்டுமென்பதற்காக ஆதரவு கொடுக்கவில்லை. மாறாக எங்களுடைய நீண்ட கால அரசியல் அபிலாசைகளுக்கு ஒரு தீர்வு கிட்டுவதற்கு சந்தர்ப்பமாகக் கருதி தான் இந்த அரசாங்கத்துக்கு நாங்கள் ஆதரவைக் கொடுத்தோமெனவும், அவர் கூறினார்.

இந்த நாட்டினுடைய தலைவராவதற்கு பலர் இப்பொழுது முன்வந்திருக்கிறார்கள். அவர்கள் இலங்கையை ஒரு நாடாக வைத்திருக்கவும் இலங்கையினுடைய இறைமையை பாதுகாப்போம் என்றும் பல வாக்குறுதிகளைக் கொடுத்தவர்களாக பெரும்பான்மை மக்களுடைய வாக்குகளைப் பெறுவதற்கான பல பேச்சுகளில் இன்றைக்கு ஈடபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைக்கு ஒரு கட்சித் தலைவராக பிரதமராக அல்ல ஜனாபதி வேட்பாளராக அல்ல. ஒரு முக்கிய கட்சித் தலைவராக உங்களிடத்தே நாங்கள் கேட்கவிருப்பது, எங்களுடைய அரசியல் அபிலாசை குறித்து உங்கள் கட்சி நிலைப்பாடு என்ன வெனவும், அவர் வினவினார்.

ஏனென்றால் கடந்த நான்கு வருடங்களாக, நாங்கள் ஆதரவு நீங்கள் தலைமை தாங்கி புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான பல படிமுறைகள் நடந்திருந்தும், அதை இறுதி செய்ய முடியாமல் அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியாத சூழ்நிலையிலே, இன்றைக்கு நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில், எங்களுடைய மக்களுக்கு தீர்மானமாக உங்களுடைய கட்சியின் நிலைப்பாட்டை நீங்கள் அறிவிக்க வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .