2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

எம்மீது பலி சுமத்தியமை தூண்டுதலாகும்: ஈ.பி.டி.பி

Gavitha   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக உறவினர்கள் சாட்சியமளிக்கும் போது, தங்கள் உறவுகள் காணாமற்போனமைக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி காரணம் என்று கூறியமையானது, பிறிதொரு தரப்பினரின் தூண்டுதலின் பேரிலேயே கூறப்பட்டுள்ளது.

அவ்வாறான சாட்சியங்கள் அனைத்தும் போலியானது என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'ஜனாதிபதி ஆணைக்குழுவானது வெறுமன, சாட்சியாளர்கள் சொல்பவற்றை மட்டும் பதியாமல், அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். இதனையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு செய்யாவிட்டால் மக்கள் மத்தியில், விசாரணையானது நம்பிக்கையீனத்தைக் கொடுத்துவிடும்' என்று அவர் கூறினார்.

'தேவைப்படும் போது, ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கவுள்ளேன். சாட்சியமளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றேன்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'சாட்சியங்களின் எமது பெயர் பயன்படுத்தப்பட்டமையானது,  தூண்டுதலின் பேரில் சொல்லப்பட்டதாகும். இது திட்டமிட்ட ரீதியில் எம்மீது சேறு பூசும் செயற்பாடு ஆகும். மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், முன்னாள் அமைச்சர் தி.மகேஸ்வரன் உள்ளிட்டவர்களின் கொலைகளுக்கு எம்மீது பலி சுமத்தப்பட்டது. அதன் உண்மைத் தன்மை என்ன என்பதை இன்று மக்கள் அறிவர். கொள்ளையடிப்பது, கப்பம் பெறுவதும், கொலை செய்வது எமது கொள்கையல்ல.

புலிகள் யாழ்;ப்பாணத்தில் இருக்காத காலத்தின் போது, புலிகளுக்காக இங்கிருந்து ஆட்கள் கடத்தப்பட்டுள்ளனர்' என்றார்.

'எமது விடுதலைப் போராட்டத்தில் ஆரம்பத்தில் ஆயுதமேந்தி போராடியவன் என்ற ரீதியில் நான் இன்றுவரை அரசியலில் இருக்கின்றேன். கடலில் தத்தளிக்கும் மக்களை கரையிலாவது ஏற்றிவிடலாம் என்ற நோக்குடன் எனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்து செய்கின்றேன்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X