2025 ஜூலை 23, புதன்கிழமை

‘ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரசியல் ரீதியாக கதைக்க வேண்டாம்’

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

“அரசியல் ரீதியான கருத்துகளை வெளிப்படுத்த வேண்டாம். பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் என்ற முறையில், உங்களை எச்சரிக்கின்றேன்” என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவரும் ஓய்வுநிலை அதிபருமான க.அருந்தவபாலனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், நேற்று (01) பிற்பகல், தென்மராட்சி கலைமன்ற மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, தென்மராட்சிப் பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட கொடிகாமம் பொதுச்சந்தை மற்றும் வீதிகள் புனரமைப்பு போன்றன, பிரதேச சபைக்கு நிதி போதாமையால் மேற்கொள்ளபடுவதில்லை என குறிப்பிடப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த சுமந்திரன் எம்.பி,

“பிரதேச சபையை இரண்டாகப் பிரித்து, அதன்மூலம் அபிவிருத்திக்கான நிதியை பெற்று வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம். பிரதேச சபையை இரண்டாகப் பிரிக்கின்றபோது, பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிப்பதும் இலகுவாக அமையும்” எனத் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவரும் ஓய்வுநிலை அதிபருமான க.அருந்தவபாலன்,

“கடந்த வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழுத் தீர்மானத்தின்படி, பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிப்பதற்காக விண்ணப்பித்த போதும், அதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. இங்கே உள்ள அமைச்சர், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும்   அரசாங்கத்தோடு மிக நெருக்கமான உறவைப் பேணுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அருந்தவபாலனின் கருத்துக்கு அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என, மண்டபத்தில் இருந்த அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

இதனால் கடும் சினமடைந்த சுமந்திரன், அருந்தவபாலனை நோக்கி, “கைதட்டுவதற்கு ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்து இருத்திவிட்டு, அரசியல் ரீதியாக கதைக்கவேண்டாம். இணைத்தலைவர் என்ற வகையில் இனிமேல் இவ்வாறு பேசவேண்டாம் என நான் உங்களை எச்சரிக்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

அருந்தவபாலனை பேச விடாது சுமந்திரன் எச்சரிக்கை விடுத்த போது, சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து “கூட்டத்தை நடத்துகின்ற தலைவர், இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என, அருந்தவபாலன் தெரிவித்தார்.

இதற்கு “நான் இவ்வாறுதான் பேசுவேன். நான் இணைத்தலைவர்” என, சுமந்திரன் பதிலளித்தார்.

இதன்பின் கூட்டம் வழமைபோல் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இடையில் வெளியேறிச் சென்றார். அவருக்குப்பின், இணைத்தலைவரான இராஜாங்க அமைச்சர் வியஜகலாவும் வெளியேறினார்.

எனினும் அங்கஜன் இராமநாதனின் தலைமையில், தொடர்ந்து 6 மணிவரை கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .