2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கைக்குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 ஜூன் 01 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிரந்தர நியமனம் கோரி, தமது கைக்குழந்தைகளை கையில் ஏந்தியவாறு சுகாதார ஊழியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, வடமாகாண ஆளுநரை சந்தித்து நிரந்தர நியமனம் குறித்து கலந்துரையாடினர்.

யாழ். மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் அலுவலகங்களின் கீழ் சுமார் 320க்கும் மேற்பட்டவர்கள் கடமையாற்றினர்.

15 வருடங்கள் மற்றும் அதற்கு குறைவான காலப்பகுதிகளில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடமையாற்றிய குறித்த சுகாதார ஊழியர்கள் கடமையில் இருந்து யாழ். மாவட்ட சுகாதார பணிமனையினால் நீக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நீக்கப்பட்டதன் பின்னரும் பல பொதுசுகாதார பரிசோதகர்கள் அலுவலகத்தில் கடமையாற்றி வருகின்றனர்.

இவ்வாறு கடமையாற்றி வரும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி கடந்த பல மாதங்களாக வடமாகாண சபை முன்பாகவும் வடமாகாண சுகாதார அமைச்சரின் அலுவலகத்தின் முன்பாகவும் போராட்டங்களை குறித்த ஊழியர்கள் முன்னெடுத்து வந்தனர்.

இவ்வாறான நிலையில், இன்று புதன்கிழமை (01) வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக குழந்தைகளை ஏந்தியவாறு வெயிலில் நின்று நிரந்தர நியமனம் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், வடமாகாண ஆளுநரையும் சந்தித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சரை ஆளுநர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரச்சினை குறித்து கலந்துரையாட முற்பட்ட போது, வடமாகாண சுகாதார அமைச்சர் கூட்டமொன்றில் இருப்பதனால் கதைக்க முடியாது என கூறியதாகவும், வெள்ளிக்கிழமை (03) அலுவலகத்துக்கு வருமாறும் நிரந்தர நியமனம் குறித்து உறுதியான பதிலளிப்பதாகவும் தெரிவித்தாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தெரிவித்தார்.

குடும்ப வறுமை, தொழில் இல்லாத பிரச்சினை, குடும்பங்களையும் கைக்குழந்தைகளையும் பராமரிப்பதற்கு முடியாத நிலையில் இருக்கும் தமக்கு வேலை வாய்ப்பினை தருமாறு பல கோரிக்கைகளை முன்வைத்த போதும், வடமாகாண அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக கைக்குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தாய்மார் தெரிவித்ததுடன், வெள்ளிக்கிழமை உரிய பதில் வழங்கப்படாவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X