2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

காணி விடுவிக்கப்படுவது மாத்திரம் போதாது; அடிப்படை வசதிகளும் தேவை

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களைப் பாதுகாப்புப் படையினரிடமிருந்து விடுவிப்பது மட்டும் போதாது. மக்கள் மீள் குடியேறத் தக்கவகையில் அதற்குரிய அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். 

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்,

பல வருட காலமாக இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தற்காலிகமாக வசித்துவரும் எமது மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேறுவதற்கு தயார் நிலையில் இருக்கின்ற போதிலும், அதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு இயலாத நிலையிலேயே மக்கள் இருந்து வருகின்றனர். 

தங்களது அன்றாட வாழ்க்கைத் தேவைகளையே ஈட்டிக்கொள்ள இயலாத நிலையில், பொருளாதார ரீதியில் இம்மக்கள் கடந்த பல வருட காலமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

எனவே, பாதுகாப்புப் படையினரிடமிருந்து விடுவிக்கப்படும் எமது மக்களின் காணிகளில் எமது மக்கள் மீளக் குடியேறக்கூடிய வகையிலான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். 

அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல், மக்கள் மீளக் குடியேறுவதில் அக்கறை காட்டுவதில்லை எனக் கூற முடியாது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதன் மூலமே எமது மக்கள் அப்பகுதிகளில் பயன் பெறுவதற்கான இலக்கை அடைய முடியும். 

அவ்வாறின்றி, வெறுமனே எமது மக்களின் காணிகளை விடுவிப்பது மட்டும் பயன்பாடாக அமையப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X