2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கடலட்டைப் பண்ணை விவகாரம்: சுமந்திரன் விளக்கம்

Niroshini   / 2021 டிசெம்பர் 19 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ். நிதர்ஷன்

கடலட்டை பண்ணை அமைப்பதில் பிரதேச சபைகளின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தான் கூறிய கருத்தை மறைத்து, ஒரு பகுதியை மாத்திரம் வெளியிட்டுள்ளதாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

'கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை' என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்தை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக, இன்றைய தினம் (19), யாழ்ப்பாணத்தில் வைத்து, ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே, எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தின்போது, சம்பந்தப்பட்ட சட்ட பிரதியை காண்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதில் சொல்லப்பட்டிருந்த சட்ட ஏற்பாடுகளை தெளிவுபடுத்துமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டார் என்றார்.

 

கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் செயற்பாடுகளின் போது, பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என்பது உண்மை எனத் தெரிவித்த அவர், ஆனால், பிரதேச சபைகளின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என சட்டத்தில் உள்ளதை அவருக்கு கூறினேன் எனவும் தெரிவித்தார்.

ஆனால், அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் பிரதேச சபைகளின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என  தான் கூறிய கருத்தை மறைத்து, ஒரு பகுதியை மாத்திரம் வெளியிட்டுள்ளார்கள் எனத் தெரிவித்த அவர், அது அரை உண்மையே ஆகும் எனவும் கூறினார்.

சட்டத்தின்படி கருத்தைப் பெறுவதென்பது, அந்த கருத்துகளை உள்வாங்கி செயற்படுத்துவதே ஆகும் எனவும், சுமந்திரன் தெரிவித்தார்.        


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .