2025 நவம்பர் 26, புதன்கிழமை

காதலனின் வீட்டில் கைவரிசை காட்டிய காதலி

Janu   / 2025 நவம்பர் 26 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரியை சேர்ந்த இளைஞனும் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்துள்ளதுடன் இருவருக்கும் திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்படடிருந்த நிலையில் காதலி சில நாட்களாக காதலனின் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் காதலனின் வீட்டில் தாய் வைத்த தாலிக்கொடி உட்பட 8 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய சாவகச்சேரி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிளிநொச்சியில் இருந்து வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த காதலி, சாவகச்சேரியில் உள்ள காதலன் வீட்டில் வைத்து புதன்கிழமை (25)  இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தாலிக்கொடியை சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடைவு வைத்ததாகவும் மீதி நகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் டிக்டொக் சமூக வலைத்தளத்தில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் இதுவரையில் 27 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளதாகவும் மேலதிக பணம் செலுத்துவதற்காக காதலன் வீட்டில் திருடியதாகவும் குறித்த பெண் கூறியுள்ளார்.

இதே போன்று அண்மை நாட்களில் வேறு சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக இளம் யுவதி ஒருவர் தனது நகையை விற்பனை செய்து இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டதுடன் நகை திருட்டு போயுள்ளதாக பொய் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

எனவே பொதுமக்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகள் இணைய மோசடி தொடர்பில் மிக அவதானமாக இருக்குமாறு சாவகச்சேரி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

எஸ். நிதர்ஷன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X