2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கர்ப்பிணி கொலை: 12 வயது சிறுவனுக்கு பாதுகாப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில், 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கண்கண்ட சாட்சியாக உள்ள 12 வயது மாற்றுதிறனாளியான சிறுவனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என, பொலிஸாருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.

ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் சிறுவனின் பாதுகாப்பு தொடர்பில் சிறுவனின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இன்று புதன்கிழமை (08) நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

இதன்போது, குறித்த சிறுவன் மாற்றுத்திறனாளியாக உள்ளமையால் எதிர்காலத்தில் இவ்வழக்கு தொடர்பில் சிறுவனுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதேநேரம், சிறுவன் வாய்பேச முடியாத காரணத்தால், கைதடியில் உள்ள நவீல்ட் பாடசாலையின் ஆசிரியர்கள் அல்லது அச்சிறுவனின் மொழி அறிந்தவர்களின் உதவியுடன் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும். அத்துடன் சிறுவனின் பாதுகாப்பை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இவற்றை கவனத்தில் கொண்ட நீதவான், சிறுவனின் பாதுகாப்புத் தொடர்பில், பாதுகாப்பை உறுதி செய்து பொலிஸார், நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை நடவடிக்கை எடுக்காவிடில் அது ஏன் என்பதை நீதிமன்றுக்கு பொலிஸார் தெளிவுபடுத்த வேண்டும்.

சிறுவனின் மொழி புரிந்தவர்களைக் கொண்டு அச்சிறுவன் கூறும் குற்றவாளிகளின் அங்க அடையாளங்களை தெரிந்து, துறைசார் நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளிகளின் உருவங்களை வரைய வேண்டும். சிறுவனுக்கு எவரும் அச்சுறுத்தல் விடுவார்களாயின் அவர்கள் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த வேண்டும். மேலும், சிறுவனுக்கு நீதிமன்றத்தின் மறு அறிவித்தல் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணியும் 4 வயது சிறுவன் ஒருவரின் தாயான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இவருடைய கொலை தொடர்பில், மண்டைதீவு பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் சென்ற இருவர் அதே தினத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் முக்கிய சாட்சியாக 12 வயது மாற்றுதிறனாளியான சிறுவன் ஒருவனின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டு சிறுவனின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X