2025 ஜூலை 31, வியாழக்கிழமை

கர்ப்பிணி பெண்களுக்கான உணவு பொதிகளில் முறைக்கேடு

Gavitha   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்ப்பிணித் தாய்;மார்களுக்கு வழங்கவேண்டிய போசாக்கு உணவுப் பொருட்களுக்குப் பதிலாக சவர்க்காரம், சலவைத் தூள், சீனி, பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டமை நிரூபிக்கப்பட்டதையடுத்து, சங்கத்தின் பொது முகாமையாளரையும் கிளை முகாமையாளரையும் பதவியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக வடமாகாண கூட்டுறவு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கர்ப்பிணிகளுக்கான போசாக்கு உணவு வழங்கலில் முறைகேடு இடம்பெற்றதாகச் செய்தி வெளியாகியிருந்தது. இதனையடுத்து, உடனடியாகக் கூட்டுறவுத் திணைக்களத்தின் ஊடாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், கர்ப்பிணித் தாய்;மார்களுக்கு வழங்க வேண்டிய போசாக்கு உணவுப் பட்டியலில் உள்ள நெத்தலி, தகரத்தில் அடைத்த மீன் போன்றவற்றுக்குப் பதிலாக சவர்க்காரம், சலவைத்தூள், சீனி, பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டமை நிரூபணமாகியுள்ளது.

அத்தோடு பற்றுச்சீட்டில் வழங்கப்பட்ட இந்தப் பொருட்களின் விவரங்களைக் குறிப்பிடாமல் நெத்தலி, தகரத்தில் அடைத்த மீன் போன்றவற்றை வழங்கியதாகக் குறிப்பிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

கர்ப்பிணித் தாய்மாரின் உடல் ஆரோக்கியத்துக்கு உதவுவதற்காக மகளிர் விவகார அமைச்சால் மாதந்தோறும் 2,000 ரூபாய் பெறுமதியான போசாக்கு உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வுணவுப் பொருட்கள் கூட்டுறவுச் சங்கங்களின் மேம்பாடு கருதி, அரசாங்க அதிபரின் ஒத்துழைப்புடன் வடக்கு மாகாணம் முழுவதிலும் கூட்டுறவுச் சங்கங்களினூடாகவே விநியோகிக்கப்படுகின்றன.

எல்லாக் கூட்டுறவுச் சங்கங்களும் தமக்குள்ள பொறுப்புக்களை உணர்ந்து பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள  9 வகையான உணவுப் பொருட்களை நேர்த்தியான முறையில் விநியோகித்து வருகின்றனர். இந்நிலையில், சுன்னாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இத்தகைய முறைகேடு நடந்திருப்பது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாததும், ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.

விசாரணையில் பயனாளிகளின் முறைப்பாட்டின் உண்மைத்தன்மை  நிரூபிக்கப்பட்டதையடுத்து, உரிய பொருட்களை விநியோகம் செய்யத் தவறிய காரணத்துக்காகச் சங்கத்தின் பொது முகாமையாளரையும், கிளை முகாமையாளரையும் உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கி கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் சட்டவிதிகளுக்கு அமைய ஒழுக்காற்று விசாரணையை மேற்கொள்ளுமாறுகூட்டுறவுத் திணைக்களத்தால்  சுன்னாகம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் நெறியாளர் குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து கடந்த மாதம் 22 ஆம் திகதி  ஆம் திகதி கூடிய சங்கத்தின் நெறியாளர்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்;ட முடிவுகளின்படி சங்கத்தின் பொது முகாமையாளரும், கிளை முகாமையாளரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பாக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என அந்த அறிக்ககையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .