2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

‘கரைவலைப்பாடுகள் கைமாறிவிட்டன’

Editorial   / 2017 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாஸ்கரன்  

“கடந்த காலத்தில், 1983ஆம் ஆண்டு வரை தமிழர்களிடம் இருந்த கரைவலைப்பாடுகள் இன்று தென்னிலங்கை மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களங்களின் முறையற்ற நடவடிக்கைகளே காரணம்” என, வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.   

இது குறித்து அவர் இன்று (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,   

“சிறு தொழிலாளர்களுக்கு, இறங்குதுறைகள் போதாத நிலைமை, முல்லை கரையோர சில இடங்களில் நிலவுகின்றது. இருந்தும், கரைவலைத் தொழில்களுக்காக முன்னைய காலத்தில் பாடுகள் வழங்கப்பட்டதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது 25 தொடக்கம் 40 வரையான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பாகும்.   

“தற்போது, தென்னிலங்கையில் இருந்து கையூட்டுகள் கொடுத்து அனுமதிகளைப் பெற்று வருபவர்கள், உழவு இயந்திரத்தின் மூலம் கரைவலை இழுக்கின்றனர். இதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கடற்றொழில் திணைக்களங்கள் இருக்கின்றன.   

“கரைவலைச் சட்டமானது, ஆகக்கூடியது 2,700மீற்றர் தூரம் வரையே வளைக்கலாம். இது மனித வலு மூலம் இழுக்கக்கூடியது. தற்போது, மனித வலுவைப் புறந்தள்ளி உழவு இயந்திரத்தின் மூலம் 6,000 மீற்றருக்கு மேல் கரைவலை வளைக்கின்றார்கள்.   

“இதனால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்மை தனிநபர் வாழ்வாதார பாதிப்பு, நீண்ட தூரத்துக்கு வலை வளைப்பதால் சிறு படகு தொழிலாளர்கள் பாதிப்பு, மீன் உற்பத்திகளில் பாரிய பின்னடைவு, பாசிகள், சேறுகள், சிப்பிகள், சங்குகள் அதனோடிணைந்த கடல்தாவரங்கள் அழிவு ஆகிய நிலைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.   

“இத்தொழில் முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டியவை என, பலருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்தும் இன்றுவரை இதற்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .