2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

கவிதையுடன் ஆரம்பித்த கன்னியுரை

Editorial   / 2017 நவம்பர் 07 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“போராட்டங்களால் பெற முடியாதவற்றை, இணக்க அரசியல் ஊடாக ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்துப் பெற முடியும் என நம்புகின்றோம்” என, வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக பதவியேற்ற, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அலிக்கான் ஷெரீப் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு, யாழ். கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (07) நடைபெற்றது.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வடமாகாணசபையில் அங்கம் வகித்த உறுப்பினர் றிப்கான் பதியுதீன், அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், அக்கட்சி சார்பில் புதிய உறுப்பினராக, அலிக்கான் ஷெரீப் பதவியேற்றார்.

பதவியேற்ற பின்னர் தனது கன்னியுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனது உரையின் போது, அவைத்தலைவரையும் முதலமைச்சரையும், தூய தமிழில் கவிதை வடிவில் விளித்து உரையைத் தொடங்கினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“சிறுபான்மையினரான நாம், எமது உரிமைகளைப் பெறுவதற்காக அஹிம்சை வழியில் போராடினோம்; ஆயுத வழியில் போராடினோம். அதனால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்தோம். பல்லாயிரக்கணக்கானவர்கள் அவயங்களை இழந்து அங்கவீனர்கள் ஆகியுள்ளனர். இந்நிலையில் நாம் தற்போது, இணக்க அரசியல் ஊடாக ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து, உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்கிறோம்.

“அதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். தமிழ், முஸ்லிம், மலையாகத் தமிழ் மக்கள் என நாம், 25 சதவீதம் சிறுபான்மையினர் உள்ளோம். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்” என்றார்.

அவரின் உரையை தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், “தங்களின் தமிழைப் பாராட்டுகின்றேன். அத்துடன் தங்களின் உரையின் ஊடாக, பல சாதகமான கருத்துகள் வெளிப்பட்டுள்ளன.

“உங்கள் உரையின் ஊடாக தங்களின் கட்சித் தலைவரின் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளனவோ என எண்ணத் தோன்றுகின்றது. அவ்வாறு மாறுதல் நிகழ்ந்து இருந்தால் மகிழ்ச்சியே” எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .