2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

காணி விடுவிப்பு: மழுப்பலாகப் பதிலளித்த அமைச்சர்

Editorial   / 2017 ஜூலை 12 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வலி வடக்கில், இராணுவம், கடற்படை, பொலிஸாரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காணிகள், கட்டடங்கள், துறைமுகங்களின் விடுவிப்புத் தொடர்பில், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மழுப்பலாக பதிலளித்தார்.

யாழ். மாவட்டத்துக்கான விஜயம் ஒன்றை இன்று (12) மேற்கொண்டிருந்த, டி.எம்.சுவாமிநாதன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

இதன்படி, காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், புனரமைக்கப்பட்ட கட்டடத் தொகுதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், “குறித்த பாடசாலைக்குரிய காணி முழுவதும் விடுவிக்கப்பட்ட அறிவித்தல் ஜனாதிபதியால் நேரடியாக கையளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பாடசாலைக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றையும் குடிநீர் கிணற்றையும் இதுவரை பொலிஸார் விடுவிக்கப்படாமல் தம்வசம் வைத்துள்ளனர். இதனால், மாணவர்களுக்கான குடிநீரை, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாகவே பெற்றுக் கொள்ள வேண்டியதாக உள்ளது. எனவே பொலிஸாரின் பிடியில் உள்ள கட்டடம் மற்றும் கிணற்றை மீட்டுத்தருமாறு’ அமைச்சரிடம், பாடசாலை அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் “இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள பாடசாலைக்குச் சொந்தமான சுமார் 200 மீற்றர் நீளமுடைய வீதியை விடுவிக்க வேண்டும். அவ்வீதி விடுவிக்கப்பட்டால் மட்டுமே, தையிட்டியில் உள்ள மாணவர்கள் சுலபமாக பாடசாலையை வந்தடைய முடியும். தற்போது அம்மாணவர்கள் பல கிலோமீற்றர் தூரம் சுற்றியே பாடசாலைக்கு வர வேண்டிய நிலை உள்ளது” எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக பதிலளித்த அமைச்சர், “பொலிஸாரால் விடுவிக்கபடாதுள்ள பகுதிகள் தொடர்பில் எழுத்து மூலம் அறிவித்தால் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகத்” தெரிவித்தார்.

அத்துடன், “குடிநீருக்காக வேறு கிணறொன்றை, தனது அமைச்சின் நிதியில் இருந்து அமைத்துத் தருகின்றேன” என்றார்.

மேலும், “காங்கேசன்துறை துறைமுகத்தின் விடுவிப்புத் தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்ட போது, காங்கேசன்துறை துறைமுகம் இதுவரை விடுவிக்கப்படவில்லையா” என்று ஆச்சரியமாக அமைச்சர் கேட்டார்.

அவ்விடுவிப்புத் தொடர்பில் பலதடவைகள் தான் பேசியுள்ளதாகவும், பல முயற்சிகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், “காங்கேசன்துறை துறைமுக விடுவிப்பு, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைகளில் தான் உள்ளது. எல்லா விடயத்தினையும் என்னால் செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.

கட்டடங்கள், காணி, வீதி, துறைமுக விடுவிப்புத் தொடர்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில், அமைச்சர் நேரடியாக பதில் எதனையும் வழங்கவில்லை. மழுப்பலான பதிலையே தெரிவித்திருந்தார். அத்துடன் பல விடயங்களுக்கு மாற்று நடவடிக்கை தொடர்பாகவே  அமைச்சர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X