2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’காற்றால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு’

Editorial   / 2020 மே 25 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த்

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கப்படுமென, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

தற்போது உள்ள நிலைமைகள் தொடர்பில், நேற்று (24) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாண மாவட்டத்தில் புயல் தாக்கத்தின் காரணமாக, சுமார் 79 வீடுகள் சேதமடைந்துள்ளனவெனவும் அதில் ஒரு வீடு முழுமையாகவும் மிகுதி 78 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளனவெனவும் கூறினார்.

அதேபோல் 204 குடும்பங்களைச் சேர்ந்த 658 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவித்த அவர், அதேபோல் கைதடி கலைவாணி வித்தியாலய பாடசாலை கட்டடம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், “தெல்லிப்பழை பகுதியில், மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் பெண்ணொருவர் காயமடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், சிறு முயற்சியாளர்களுடைய தொழில் பாதிப்படைந்துள்ளதுள்ளது. 6 பேர் தொழில் பாதிப்பு அடைந்துள்ளார்கள். அதிலும் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காற்று காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒருவரது படகு சேதமடைந்துள்ளது” எனவும், மாவட்டச் செயலாளர் கூறினார்.

இதேவேளை, கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் வாழை, பப்பாசி செய்கை பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், எனினும் வீடுகள் பாதிப்படைந்த அனைவருக்கும் நட்டஈடு வழங்குவதற்கான முயற்சிகள் மாவட்டச் செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் கூறினார்.

அத்தோடு, தொழில் முயற்சி பாதிக்கப்பட்ட சிறு முயற்சியாளர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்குரிய முயற்சிகள், மாவட்டச் செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காற்றின் பாதிப்பு தொடர்பான அறிக்கையை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பியுள்ளதாகவும், மகேசன் தெரிவித்தார்.

இதேவேளை, தொழில் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் ஏதாவது உதவிகள் வழங்க முடியுமா எனவும் தாம் ஆராய்ந்து வருவதாகவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X