2025 மே 02, வெள்ளிக்கிழமை

கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சிறிதரன் எம்.பி

Niroshini   / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.நிதர்ஷன்

நூற்றுக்கு நூறு வீதம் தமிழர்கள் வாழும் இந்த வடமாகாணம் சார்ந்த கூட்டத்திலே நீங்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பேசுவதால் தங்களால் கிரகித்து பதில் வார்த்தைகளைச் சொல்ல முடியவில்லை எனத் தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஆகவே நதான் இந்த கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறேன் என கூறிவிட்டு, வெளிநடப்பு செய்தார்.

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்றின் போது, இடைநடுவே வெளியேறிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வடக்கு மாகாண சபையினுடைய கூட்டம் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது எனவும் அந்தக் கூட்டத்துக்கு சென்றிருந்த பொழுது பாராளுமன்ற உறுப்பினர்கள் செயலாளர்கள், அரச அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள் எனவும் கூறினார்.

அந்தக் கூட்டத்துக்கு நதான் போயிருந்த போதும் ஆங்கில மொழியிலும் சிங்கள மொழியிலுமேயே அந்த கூட்டத்துக்கான  பேச்சுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன எனத் தெரிவித்த அவர்,"எனக்கு ஆங்கிலம் தெரியாது. தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்வதற்கான ஏற்பாடு செய்து தரவேண்டும்" என்று நான் கேட்டபொழுது, செய்கின்றோம், பார்ப்போம் என்று சொன்னார்கள். ஆனால் அதன்பின்னர் ஒரு மணி நேரம் அங்கே இருந்த போதும் எந்த விதமான மொழி மாற்றத்துக்கான ஆயத்தங்களும் நடைபெறவில்லை எனவும் கூறினார்.

"இதனால்  இந்த விடயங்களை என்னால் கிரகித்து பதில் சொல்ல முடியாது என்று  சொன்னேன். எத்தனையோ ஆயிரம் பேர் இந்த மண்ணில் இறந்ததற்கு அடிப்படை மொழி ரீதியான பிரச்சினையே ஆகும். இதனாலேயே மாகாணசபை முறைமை தோன்றியது.  

"நூற்றுக்கு நூறு வீதம் தமிழர்கள் வாழும் இந்த வடமாகாணசபையிலே நீங்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பேசுவதால் எங்களால் கிரகித்து பதில் வார்த்தைகளைச் சொல்ல முடியவில்லை. ஆகவே, நான் இந்த கூட்டத்தில் இருப்பதில் பிரயோசனமில்லை என்று கருதுகிறேன் எனக் கூறிவிட்டு கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறேன் என்றேன்" என்றார்.

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, இன்றையதினம் (14), யாழ்ப்பாணம் - கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில், வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நடைபெற்றது.

 இந்த கலந்துரையாடலில், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், சி.சிறிதரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .