2025 மே 22, வியாழக்கிழமை

‘கூட்டமைப்பு காலை வாரியது’

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 மே 03 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு காலை வாரியது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (03) மன்னார் பிரதேச சபை மண்டபத்தில் மன்னார் பிரதேச சபையின் செயலாளர் திருமதி டி.எம்.வி.லோகு தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தை கட்டியெழுப்பும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளில் நல்லாட்சி ஒன்றை ஏற்படுத்துவதற்கும், அதன் மூலம் மக்களின் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் நாங்கள் எண்ணினோம்.

அந்தவகையில், நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

அவர்கள் வெற்றி பெற்ற சபைகளில் எமது கட்சி இரண்டாம் நிலையாகவும், நாங்கள் வெற்றி பெற்ற சபைகளில் அவர்களது கட்சி இரண்டாம் நிலையாகவும் இருந்து, தமிழ் - முஸ்லிம் நல்லுறவுக்கான பாலமாக புதிய ஆட்சியை மலரச் செய்வோம் என்று பேசினோம்.

எமது யோசனைக்குச் செவிசாய்த்து ஆரம்பத்தில் இதற்குச் சம்மதித்தவர்கள், உள்ளுராட்சி சபைகளை அமைப்பதற்கான காலம் நெருங்கி வந்து கொண்டிருந்த போது, நாங்கள் வெற்றி பெற்ற சபைகளில் எங்களை வீழ்த்த வேண்டுமென்று செயலாற்றினார்கள்.

எம்மைத் தவிர்த்து எல்லாக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு, எமக்குக் கிடைத்த மக்கள் ஆணையை சிதறடிப்பதற்கு அவர்கள் முயற்சிகளில் வலுவாக ஈடுபட்டார்கள்.

இந்த நடவடிக்கைகள் தான் வன்னி மாவட்ட உள்ளுராட்சி சபைகளில், சபைகளை அமைப்பதில் முரண்பாடுகளும், சம நிலையற்ற தன்மையும் ஏற்படக் காரணமாயிற்று” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X