2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

’கோப்பை எனது கையில் திணித்துவிட்டனர்’

Editorial   / 2017 ஜூலை 11 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

"ஆளுநரிடம் செல்வதற்கான உள்ளே சென்ற போது, வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானக் கோப்பை (பைல்) என்னுடைய கையில் கொண்டுவந்து திணித்து விட்டார்கள். எல்லோரும் கெட்டிக்காரர்கள்தானே? இல்லாவிட்டால் எப்படி மாகாண சபை உறுப்பினராகத் தெரிவாவது?" என, வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் கோப்பாய்த் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில், சமகால அரசியல் கருத்தரங்கும் கேள்வி - பதில் நிகழ்ச்சியும், நீர்வேலி கந்தசுவாமி ஆலய வடக்கு வீதி மண்டபத்தில் இன்று (11) நடைபெற்றது.

அங்குவைத்து அவர் மேலும் தெரிவிக்கையில், "வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட 3 கட்சிக் கூட்டத்திலும் நான் கலந்து கொள்ளவில்லை. இதனால் அங்கு பேசப்பட்ட விடயங்கள், நடந்தவை எனக்குத் தெரியாது. ஆனால், அவர்களுடைய நிலைப்பாடு எனக்கு அறிவிக்கப்பட்டது. 14 ஆம் திகதி நடைபெற்ற அமர்வில் பிறழ்வு இடம்பெற்றது. இருப்பினும், அதற்குப் பின்னர் நடைபெற்ற கட்சிக் கூட்டங்களுக்கு நான் போகவில்லை. பின்னர் என்னை கட்சி அலுவலகத்துக்கு வருமாறு சொல்லப்பட்டது.

கட்சி அலுவலகத்துக்குள் போன போது ஏற்கெனவே முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரையப்பட்டு, கணினியில் தட்டச்சப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பார்த்த போது, அதில் முதலாவது பெயராக என்னுடைய பெயர் இருந்தது.

கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் நான் கையெழுத்திடுகின்றேன். ஆனால், அத்தீர்மானத்தில் என்னுடைய பெயர் முதலாவதாகப் போட வேண்டாம். அதைத் தவிருங்கள் என்று நான் கூறினேன். இதனை நான் இரண்டு மூன்று தடைவைகள் சொன்னேன்.

இருப்பினும், தொடர்ந்தும் என்னுடைய பெயரைத்தான் தீர்மானத்தில் முதலாவது பெயராகப் போட்டனர். என்னுடைய பெயர் முதலாவதாக போட்டப்பட்டமைக்கு, நான் கட்சியின் மூத்த உறுப்புரிமை என்று சொன்னார்கள்.

என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது, நான் முதலாவதாக கையெழுத்து வைத்துவிட்டேன். என்னால் அங்கு நின்று சண்டை போட முடியாது. இதற்குப் பிறகு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்ல புறப்பட்டோம்.

நான் வாகனத்தில் ஏறிய போது, பிரதி அவைத் தலைவர், அத்தீர்மானம் அடங்கிய கோப்பை (பைல்) என்னிடம் தந்தார். அப்போது நான் அவரைப்பார்த்து, 'கமலேஸ் நான் இத்தீர்மானத்தை கையளிப்பது சரியல்ல. வேறு யாரிடமும் கொடுத்து கையளியுங்கள்' என்று கூறி பிரதி அவைத் தலைவரிடமே அதை கொடுத்துவிட்டேன். இது உண்மையாக நடந்தது.

தீர்மானக் கோப்பைத் திருப்பி கொடுத்துவிட்டு நான் வாகனத்தில் ஏறினேன். அதற்கு முதல் சில வாகனங்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குச் சென்றன.

ஆளுநர் அலுவலகத்துக்குள் சென்ற போது உள்ளே வருமாறு எங்களை அழைத்தார்கள். அப்போது சிலர் முன்னுக்குச் சென்றார்கள். எனக்கு பின்னாலும் சிலர் நின்றார்கள்.

ஆளுநரிடம் செல்வதற்கான உள்ளே சென்ற போது, அந்தக் கதவடியில் வைத்து அத்தீர்மானக் கோப்பை என்னுடைய கையில் கொண்டுவந்து திணித்து விட்டார்கள். எல்லோரும கெட்டிக்காரர்கள்தானே. இல்லாவிட்டால் எப்படி மாகாண சபை உறுப்பினராகத் தெரிவாவது.
இன்றுவரை அச்சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை என்னுடைய கையில் திணித்தவர் யார் என்று எனக்குத் தெரியாது. சம்பந்தருடைய கையில் சிங்கக் கொடி புகுத்தியது போன்ற சம்பவமே நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்னுடைய கையில் வந்த சம்பவமும்.
எனது கையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்த பின்னர் அவ்விடத்தில் நின்று என்னுடைய கட்சியை காட்டிக் கொடுக்கவோ, சண்டை பிடிக்கவோ நான் விரும்பவில்லை. நான் கொண்டு சென்று வருத்தத்துடன் முகம் சுழித்தவாறே ஆளுநரிடம் கையளித்தது உண்மை. நான் சிரித்துக் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையளிக்கவில்லை" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X