2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சினிமா பாணியில் வாள்வெட்டு தாக்குதல் (படங்கள்)

George   / 2017 ஜனவரி 31 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன், எம்.றொசாந்த்

நல்லூர் கந்தர் மடத்தில் உள்ள பலசரக்கு கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலும் கடையில் நின்றிருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதலும் திங்கட்கிழமை (30) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில், கடையில் பணியாற்றிய கஜலக்சன் (வயது 24), பவிதன் (வயது 20) ஆகியோர் வாள் வெட்டுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கந்தர்மடம் அரசடி வீதியில் உள்ள கடை ஒன்றில் இருவர் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். இதன் போது மாலை 6 மணியளவில் 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் திடீரென குறித்த கடை முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி நோட்டமிட்டுள்ளனர்.

பின்னர், கடைக்கு முன்பாக அங்குமிங்கும் மோட்டார் சைக்கிளை செலுத்தியதுடன் திடீரென தாம் கொண்டுவந்த பெற்றோல் குண்டு ஒன்றை கடைக்குள் எறிந்துள்ளார்கள். இதனால், கடைக்குள் இருந்தவர்கள் அலறி கொண்டு வெளியே ஓடிவர, வாசலில் நின்ற குறித்த சமூகவிரோத கும்பல,; இருவர் மீதும் வாள் வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளது.

சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவத்தினால் நேற்று இரவு முழுவதும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமைகளை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டவர்களின் மோட்டார் சைக்கிள்களின் இலக்க தகடுகள் மறைக்கப்பட்டு இருந்ததாகவும் முகங்கள் கறுப்பு துணிகளால் கட்டப்பட்டு இருந்ததாகவும் சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தால் கடையில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன. கடையில் தீ மேலும் பரவியதை அடுத்து யாழ். மாநகரசபையின் தீயணைப்பு படைப்பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மேற்படி சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள சி.சி.ரி கமராவிலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X