2025 மே 12, திங்கட்கிழமை

’சட்டவிரோத மீனவர்களை வௌியேற்றவும்’

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ். மாவட்டத்தில் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் அழுத்தங்கள் எதுவுமின்றி தமது கடமைகளை ஆற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் எதிர்வரும் நாள்களில் வெளியேற்றப்பட வேண்டுமெனவும், யாழ்.மாவட்ட மீனவ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

அரசாங்கம் அதனை செய்ய தவறுமிடத்து, யாழ்.குடாநாட்டில் பெருமெடுப்பிலான போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும், மீனவ அமைப்புகள் எச்சரித்துள்ளன.

யாழ். ஊடக அமையத்தில், இன்று (22), யாழ்.மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம், யாழ்.மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சம்மேளனம் என்பவற்றின் கூட்டிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே, அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா, அண்மையில் வடமராட்சி கிழக்கில் வத்திராயன் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்ய முற்பட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டுள்ளனரென்றார்.

பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் வேட்பாளர் ஒருவர் அதிகாரிகளைப் பணியாற்ற விடாது தடுத்ததுடன், சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட மீனை எடுத்து செல்ல உதவியதுடன், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் காப்பாற்றி விடுவித்துள்ளாரெனவும், அவர் கூறினார்.

“அவரது இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராகவும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பளை பொலிஸாரினதும் இலங்கை கடற்படையினரிடமும் உதவி கோரிய போதும், எத்தகைய உதவியும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

“சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுபடுத்தவென அழைத்துச்செல்லப்பட்ட அதிரடிப்படையினர் கூட அதிகாரிகளை வெளியேற்றுவதிலேயே மும்முரமாக இருந்துள்ளனர்.

“இந்நிலையில், சட்டவிரோத மீன்பிடிகாரர்களுக்கு தொழில் அனுமதியை வழங்க அதிகாரிகளை மிரட்டிய பளை பொலிஸ் பொறுப்பதிகாரி தற்போது தடை செய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஆதரவாக அவர்களது படகுகள், வெளியிணைப்பு இயந்திரங்கள் களவாடப்பட்டதாக குற்றஞ்சுமத்தி அதிகாரிகளை உள்ளே தள்ள முற்பட்டுள்ளார்.

“உரிய அனுமதிகள் ஏதுமற்றதான இந்தப் படகுகள், வெளியிணைப்பு இயந்திரங்கள் காணாமல் போயிருப்பதாகக் கூறி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளை பளை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

“அதிகாரிகள் மீதான மிரட்டல்களை அரசியல்வாதிகள், பொலிஸார், கடற்படை நிறுத்த வேண்டும். அவர்கள் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். தென்னிலங்கை மீனவர்களது வருகை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” எனவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கம், இவ்விடயத்தில் தகுந்த நடவடிக்கையை எடுக்காவிடின், குடாநாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக, மீனவ பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறிய வருகைக்கு எதிராக வடமராட்சி வடக்கு மீனவ அமைப்புகள் முன்னெடுத்து வரும் தொழில் புறக்கணிப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக, குடாநாடு தழுவிய ரீதியில் ஏனைய மீனவர்களும் இணைந்து கொள்வது தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும், அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X