2025 மே 17, சனிக்கிழமை

சிறுப்பிட்டி விவகாரம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானம்

Editorial   / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினர் ஐவருக்கும் எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் பரிந்துரைத்தது.

“வழக்கின் எதிரிகள் ஐவருக்கும் எதிராக சுருக்கமுறையற்ற விசாரணையில் முன்வைக்கப்பட்ட சாட்சிகளில் நீதிமன்று திருப்தியடைகின்றது. அதனால் எதிரிகளுக்கு எதிரான ஆள்கடத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மன்று கட்டளையிடுகின்றது.

சுருக்கமுறையற்ற விசாரணைகளின் வழக்கேடு மற்றும் வழக்குடன் தொடர்புடைய சான்றுப்பொருள்கள் இருப்பின், அவற்றையும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பாரப்படுத்தவும் மன்று உத்தரவிடுகின்றது.

மேல் நீதிமன்றில் எதிரிகள் ஐவருக்கு எதிராகவும் உரிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு மன்று பரிந்துரைக்கின்றது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றிலிருந்து அழைப்புக் கட்டளை வரும் போது எதிரிகள் ஐவரும் அந்த மன்றில் முற்படவேண்டும். அதுவரை எதிரிகளுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம் ஏற்கெனவே வழங்கப்பட்ட பிணையில் இந்த மன்று அவர்களை விடுவிக்கின்றது என்று, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் சுருக்கமுறையற்ற விசாரணையின் கட்டளையை வழங்கினார்.

யாழ்ப்பாணம் - சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரின் வழக்கு புதன்கிழமை (24) யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் சுருக்கமுறையற்ற விசாரணையின் இறுதிக் கட்டளைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது மன்றில் சந்தேகநபர்களான 5 இராணுவத்தினரும் முன்னிலையாகினர். வழக்கின் 3ஆவது சந்தேகநபரான இராணுவச் சிப்பாய் உயிரிழந்துவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .