Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூலை 03 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
“ஜெனீவா தீர்மானம் என்பது சர்வதேச விசாரணையாக அமைய வேண்டுமே தவிர இலங்கை அரசாங்கத்தின் நீதி விசாரணையாக அமையக் கூடாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனீவா அமர்வு தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் காணாமற்போகச் செய்யப்பட்டும் உள்ளனர். இது தமிழ் மக்களுடைய வாழ்வில் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
மிக முக்கியமாக தமிழர்களுடைய வாழ்வியல் சிதைக்கப்பட்டதும் வரலாறு அழிக்கப்பட்டதும் 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான்.
இந்த யுத்தத்துக்கு பின்னர் தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் இன அழிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள், தமக்கான நியாயம் கோருகின்ற ஒரு வழியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையைத் தேர்ந்தெடுத்தனர்.
அமெரிக்கா அந்த தீர்மானத்தைக் கொண்டுவந்து அதனூடாக அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் 2011ஆம் ஆண்டு தொடக்கம் பல செயற்பாடுகளை முன்னெடுத்துவந்தது.
தமிழர்களைப் பொறுத்தவரை அல் ஹுசைனின் அறிக்கை சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தாலும் கூட இதுவரை எந்த முன்னேற்றங்களையும் வழங்கவில்லை.
குறிப்பாக மக்கள் முழுமையாக சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை, சிறையிலிருக்கும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, காணாமல் போனவர்களுக்கான எந்த நியாயமும் வழங்கப்படவில்லை.
2018ஆம் ஆண்டுக்குள் மீள்குடியேற்றங்களைச் செய்வோம் என மங்கள சமரவீர சொல்லுமளவுக்கு சிங்கள அரசாங்கங்கள் தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்றன.
எனவே, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஜெனீவா தீர்மானம் என்பது வழி திறக்கின்ற பாதையாக அமைய வேண்டும்.
ஆகவே, பாதுகாப்பான முறையில் சாட்சியங்களை முன்வைக்கக்கூடிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த விசாரணையானது சர்வதேச தரத்தில் தான் அமையலாமே தவிர ஒருபோதும் இலங்கை அரசாங்கத்தின் நீதி விசாரணையாக அமையக் கூடாது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .