2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘ஜனாதிபதி திரும்பப் பெற வேண்டும்’

Editorial   / 2017 ஜூலை 05 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

மதுவரிக் கட்டளைச் சட்ட பரிந்துரைகள் தொடர்பாக, நிதியமைச்சர் தெரிவித்த யோசனைகளை, ஜனாதிபதி திரும்பப்பெற வேண்டும் என மதுசாரத்துக்கு எதிரான தமிழ் இளைஞர் அணி வலியுறுத்தியுள்ளது.

நிதியமைச்சர் தெரிவித்த கருத்துகள், இதுவரை காலம் மக்கள் போராடி அடைந்த “மதுசாரம், போதைப்பொருள் தடுப்பு” தொடர்பான காத்திரமான அடைவுகளை திசை திருப்புவதாக அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில, இன்று மாலை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, தமிழ் இளைஞர் அணியினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“மதுசார கம்பனிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மதுசார உற்பத்தி வரியான 100 மில்லியன் ரூபாய்களை, ஒரு மில்லியன் ரூபாய்களாகக் குறைப்பதற்கும், பியர், வைன் போன்றவற்றின் விலை அதிகம் எனவும் அவற்றின் விலையைக் குறைத்து, மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், நாடாளுமன்றத்தில் மதுவரிக் கட்டளைச்சட்டம் பரிந்துரைகள் தொடர்பாக, கடந்த மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற விவாதத்தில் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் சாராயம், கசிப்பு, சட்டவிரோத போதைப்பொருள் பாவனையைக் குறைக்கலாம் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மதுசாரத்தில் கிடைக்கப் பெறும் வரி வருமானத்தை விட, மூன்று மடங்கு பணத் தொகையை, இவற்றின் பாவனையால் நோய்வாய்ப்பட்டவர்களின் சிகிச்சைக்காக அரசாங்கம் ஆன்டுதோறும் செலவிடுகின்றது. இது மக்களின் அபிவிருத்திக்கு செலவிட வேண்டிய பணமாகும். ஆகவே, அரசாங்கத்துக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்வதாயின், வரியை மேலும் மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், சாராயப் பாவனையால், ஆண்டுதோறும் 20,000 பேர் வரையில் இறக்கின்றனர். அதாவது, 100,000 பிள்ளைகளின் தந்தைமார், தங்களை தொழிற்திறன் அதிகமாகவுள்ள வயதில், அதாவது குறைந்த வயதிலேயே இறக்கின்றனர். இதனால் நாட்டுக்கும் அவர்தம் குடும்பத்துக்கும் ஏற்படும் பொருளாதார இழப்புக்கள் கணக்கிட முடியாது

ஆகவே, எமது மக்களையும் அவர்களின் அபிவிருத்தியையும் கருத்திற்கொண்டு செயற்படுவோம் எனக்கூறி ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கத்தின் நிதி அமைச்சரையும் அவரது பிழையான முட்டாள்தனமான யோசனைகளுக்கு துணைபோகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதியமைச்சர்களையும் வன்மையாக கண்டிப்பதோடு, அவர்களின் பதவிகளுக்கு, தகுந்தவர்களை நியமிக்குமாறும், மதுவரிக் கட்டளைச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை உடனடியாக மீளப்பெறுமாறும் ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம்” எனத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X