2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தமிழ் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களும் இல்லாத நிலை வேண்டும்

Niroshini   / 2016 மே 13 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த காலங்களைப் போன்று யுத்த வெற்றி விழாக்கள் இனி நமது நாட்டில் கொண்டாடப்படமாட்டாதென அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது வரவேற்கத்தக்கது. அதேபோன்று தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களாகக் கருதப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாத்து வரக்கூடிய அனைத்தையும் அகற்றவும் அரசாங்கம் முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“யுத்த வெற்றி விழாக்கள் கடந்த காலங்களில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கடந்த கால யுத்தம் தொடர்பான ஞாபகார்த்த நிகழ்வுகள் எவையாயினும். அவற்றால் தமிழ் பேசும் மக்களின் உணர்வுகள் புண்படக்கூடாது என்ற விடயத்தை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளோம்.

எமது இந்த நிலைப்பாட்டை இந்த அரசாங்கம் அவதானத்தில் எடுத்து, அதனை நடைமுறைப்படுத்தியிருப்பதானது, தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நல்ல ஆரம்பங்களில் ஒன்றாகுமென நாம் கருதுகின்றோம்.

அதேநேரம், கடந்த கால யுத்தம் காரணமாக இறந்த எமது உறவுகளை நினைவுகூறும் முகமாக ஒரு நினைவுத்தூபியும் நினைவுச் சதுக்கமும் வடக்கில் அமைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தையும் நாம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி இருந்தோம். அதற்கும் இந்த அரசாங்கம் இணக்கம் கண்டிருப்பதை நாம் வரவேற்கின்றோம்.

அத்துடன்,  தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களாக சில அழிவுச் சின்னங்கள் பாதுகாத்து, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை எமது மக்களின் உணர்வுகளைப் பெரிதும் பாதிக்கின்ற ஒரு விடயமாகுமென்பதையும் நாம் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றோம்.

எனவே, அவை அனைத்தையும் அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடங்களை ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்த இந்த அரசு முன்வர வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X