2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தமிழ் மக்களிடம் கருத்து கேட்பதை வரவேற்கிறோம்: சிவாஜிலிங்கம்

Kogilavani   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'போரினால் ஏற்பட்ட இழப்புக்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட்ட பின்னர்; தான் தேசிய நல்லிணக்கத்தை நோக்கி நகர முடியும்' என்று வடக்கு மாகாண சபை உறுப்பனர் எம்.கே.சிவாஜிலிங்கம், அரசியல் அமைப்பு சீர்திருத்த மக்கள் கருத்தறியும் குழுவிடம் தெரிவித்தார்.

'கடந்த காலத்தில் நாட்டில் இருந்த அனைத்து அரசாங்களாலும் தமிழ் மக்களின் வேண்டுகோள்கள் மறுக்கப்பட்டன. தற்போது அரசியல் அமைப்பு மாற்றத்துக்காக தமிழ் மக்களின் கருத்தை கேட்க ஆரம்பித்துள்ளதை வரவேற்கிறோம்' என்றும் அவர் கூறினார்.

குறித்த குழுவின் அமர்வு, திங்கட்கிழமை (15) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் தனது தனிப்பட்ட ஆலோசனையாக இதனை சிவாஜிலிங்கம் முன்மொழிந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் இரண்டு இனத்தவரும் தத்தமது இறைமையை காக்கக்கூடிய கூட்டு இணைப்பாட்சியை கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன்.

இதன் அடிப்படையில்தான் சுவிஸ் நாடும் தனது அரசியல் செயற்பாட்டை மேற்கொள்கிறது.
கடந்த இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போயினர். போர்குற்றம் இடம்பெற்றது. இவை அனைத்துக்கும் தீர்வு காணப்பட்ட பின்னர் தான், தேசிய நல்லாட்சியை நோக்கி நகர முடியம்.
ஆயுதப்போராட்டம் மௌனித்து விட்டதாக கூறுகிறார்கள். அதனை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் மறுபடியும் ஆயுதப்போராட்டம் உருவெடுக்காது என்பதற்கு எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை. இவ்வாறுதான் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி முடிந்தது என்று கூறப்பட்டது. ஆனால் அது மறுபடியும் உருவெடுத்தது.

தனிநாடு என்ற எண்ணம் தமிழ் மக்கள் மனதில் இருந்து இன்னமும் அகலவில்லை. ஆனால் மக்களின் நலனுக்காக கூட்டாட்சி திட்டத்தை முன்வைக்கிறோம்.

இவை சரியாக நடந்தால் தனிநாடு என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்து மெல்ல மெல்ல இல்லாது போகும். ஆகவே இந்த நாட்டின் எதிர்காலம் இந்த அரசியல் அமைப்பு மாற்றத்திலேயே உள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X