2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தமிழக மக்களுக்கு உதவி வழங்க அமைச்சரவைக் கூட்டம்

George   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு வடமாகாண மக்கள் எவ்வாறான உதவிகளை வழங்க முடியும் என்பதை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெள்ளிக்கிழமை (04) அனுப்பியுள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'நினைத்துப்பார்க்க முடியாத துயரினைத் தமிழகம் இன்று சந்தித்திருக்கின்றது. வானம் பிளந்ததுபோல கொட்டித்தீர்த்த மழை ஆற்றுப்படுத்தவே முடியாத அளவுக்கு தமிழகத்தை வாட்டி வதைத்திருக்கின்றது. தமிழகமே வெள்ளக்காடாகி பல இலட்சம் மக்கள் தமது சொந்த வீட்டில் வாழமுடியாத நிலையில் இடம்பெயர்ந்து அவலத்துக்குள்ளாகியிருக்கின்றார்கள். 

தாழ்நிலங்களில் வாழ்ந்த ஏழை மக்களில் பலரின் உயிர்கள்கூட இழக்கப்பட்டிருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. பல்லாண்டுகளாக மக்கள் சிறுகச்சிறுகச் சேமித்த, சேகரித்த சொத்துக்கள்கூட அழிவடைந்திருக்கின்றன. வார்த்தைகளுக்குள் விவரிக்கமுடியாத துயர் நிறைந்த இவ்வாறான வாழ்க்கையைத் தமிழகத்திலிருக்கும் எங்களுடைய தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்றார்கள்.

எமது மண்ணில் கொத்துக்கொத்தாகத் தமிழ் மக்கள் செத்துவீழ்ந்தபோது தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதுபோல முதலில் வீதியில் இறங்கியவர்கள் தமிழக மக்களே. அவர்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள் சர்வதேச அரங்கையே உலுக்கும் அளவுக்கு வீரியம் பெற்றிருந்தன. அவ்வாறான எங்களுடைய தமிழுறவுகள் இன்று இயற்கைச் சீற்றத்தால் ஆற்றொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள். அவர்களின் துயரமுந் துன்பமும் எம்மக்கள் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளன.

எங்கள் வடக்கு - கிழக்கு மாகாணங்களிலும் மழை வெள்ளம் ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து மீண்ட சம்பவங்களும் தற்போது நிகழ்ந்துள்ளன. மீண்டும் அவ்வாறான நிலையேற்படுமோ என்ற பயம் இல்லாமல் இல்லை. ஆனாலும், தமிழகத்துடன் ஒப்பிடுகின்றபோது அங்கு நிகழ்ந்திருக்கின்ற பேரிடருக்கு நிகரான பாதிப்பினை எங்கள் மக்கள் சந்திக்கவில்லை.

பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு வடமாகாண மக்கள் எவ்வாறான உதவிகளை வழங்க முடியும் என்பதை இன்றைய எமது அமைச்சரவைக் கூட்டம் தீர்மானிக்கும்.  பாதிக்கப்பட்ட மக்கள் தமது அவல நிலையிலிருந்து விரைவில் விடுபட நாம் அனைவரும் பிரார்த்திக்கின்றோம்' என அந்த இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைத்தடியில் கலந்துரையாடல்

இதேவேளை, தமிழகத்தில் தொடர் மழையால் வெள்ளப் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06) கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள வருவமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெள்ளிக்கிழமை (04) அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'கடந்த 5 நாட்களாக பெய்த அடை மழை காரணமாக தமிழகம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. 

இலட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். எமது மக்கள் சந்தித்த அனைத்து அனர்த்தங்கள், இழப்புக்கள், பாதிப்புக்கள் எல்லாவற்றிலும் எமக்கு ஆதரவாக நின்ற தமிழக மக்கள் சந்தித்த இந்த பேரிழப்புக்கு எம்மாலான உதவிகளை செய்வது எமது தார்மீகப் பொறுப்பும் கட்டாய கடமையுமாகும். 

இந்த விடயம் தொடர்பில் மேல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இந்தக் கலந்துரையாடல் கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது' எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .