2025 மே 14, புதன்கிழமை

’தமிழரசுக் கட்சியை சுமந்திரன் அ​ழிக்கிறார்’

Editorial   / 2020 மார்ச் 13 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழீழ விடுதலைப் புலிகளைக் கருணா அம்மான் அழித்தது போல, தமிழரசுக் கட்சியை சுமந்திரன் அழிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அக்கட்சியின் மகளிர் அணியினர், சுமந்திரன் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

தமிழரசின் கொழும்பு மாவட்ட உப தலைவர் மிதுலைச் செல்வி ஸ்ரீபத்மநாதன் மற்றும் தமிழரசின் யாழ். மாவட்ட மகளிர் அணியின் செயலாளர் சி.விமலேஸ்வரி ஆகியோர், தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் வைத்து மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழரசில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் தொடர்பில் தமக்கு அநீதி இழைகப்பட்டிருப்பதால், அதற்கு நீதி கிடைக்க வேண்டுமெனக் கோரி வருகின்ற நிலையில், தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில், மேற்படி இருவரும் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மிதுலைச் செல்வி, “யாழ். மாவட்டத்தில், படித்த திறமையான உணர்வுள்ள பெண்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களைப் போடாமல், எதற்கு வேறு ஒருவரைக் கொண்டுவர வேண்டும்? அவரை இங்குள்ள பலருக்கும் தெரியாது. ஆகையால், அவரை ஏன் போட்டார்களென்று, பலரிடமும் நாங்கள் கேட்டோம்.

“அவ்வாறு சுமந்திரனிடம் கேட்டதற்கு நான் கேட்டதற்கு, என்னை அவமானப்படுத்தி அனுப்பியிருந்தார். அத்தோடு, மனித உரிமைகள் என்ற விடயத்தில் அம்பிகாவின் பங்கு தொடர்பில் என்னிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அவர்  சம்பளத்துக்கே அங்கு வேலை செய்தவர். ஆகையினால், அவரைவிடத் திறமையான பலர் இங்குள்ளனர் என்று கூறியிருந்தேன்.

“ஆனாலும், அவரின் தேவை எங்களுக்கு ஏற்படுகின்ற போது நாங்கள் நாடாளுமன்றம் சென்றால் நீங்கள் குறிப்பிடுகின்ற மனித உரிமைகள் விடயத்துக்கு அவரைக் கொண்டு செல்லாம். அதேபோல, அவரின் திறமையைப் பயன்படுத்த பல வழிகளில் சந்தரப்பங்கள் இருக்கின்றன. குறிப்பாக, எங்களுக்கு ஒரு சட்ட ரீதியான பிரச்சினை ஏற்படுகின்ற போது, நாங்கள் சட்டத்தரணிகளாகச் செல்வதில்லை. எங்களுக்குத் தேவையான சட்டத்தரணியையே நாங்கள் அழைத்துக்கொண்டு செல்வோம். அதேபோலத் தான் தேவை ஏற்படுகின்ற போது அவரின் திறமையை நாங்கள் பயன்படுத்தலாம்.

“வ்வாறு எமது மக்களின் தேவைகள், பிரச்சினைகளை அறிந்து, மக்களுடன் வந்து வேலை செய்யட்டும். அதற்குப் பின்னர் அவரைக் களமிறக்குவதா இல்லையா என்பதைப் பற்றிச் சிந்திக்கலாம். ஆனால், எதுவுமே தெரியாமல் கொண்டுவந்து இறக்கியிருப்பது, எங்களுக்கு விரக்தியை ஏற்படுத்துகிறது. அரசியலுக்குப் பெண்கள் வரவே பயப்படுகின்ற நிலையில், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துச் செயற்படுகின்ற போது, இப்படியான செயற்பாடுகள் வேதனையளிக்கின்றன.

“ஆகவே, நாம் மீண்டும் மீண்டும் கோருவது என்னவெனில், புதிதாக ஒருவரைக் கொண்டுவர வேண்டாம். இங்கு இருக்கின்ற திறமையான நல்லவர்களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். அதற்காக, எங்களுக்குத் தான் தாருங்கள் என்றில்லாமல், சகலருக்குமாகத் தான் நாங்கள் கதைக்கிறோம். மட்டக்களப்பிலும் தெரிவு நடந்தபோது, அதற்கு எதிராக ஒருமித்துப் பெண்கள் போராடிய போது, தமிழரசுக் கட்சி நீதி வழங்கியுள்ளது. அதே போன்றதொரு நீதியை தான் இங்கும் வழங்க வேண்டுமென்று கேட்கிறோம்.

“இதேவேளை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களான மாவை சேனாதிராசா, இரா.சம்பந்தன் ஆகியோர் நல்லவர்கள். அவர்களிடம் நல்ல பண்பு உள்ளது. ஆனால், சுமந்திரனின் அராஜகமாகவும் தான்தோன்றித்தனமாகவும்  முடிவெடுத்துச் செயற்படுகிறார். சுமந்திரனின் இத்தகைய செயற்பாடுகளை, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

“குறிப்பாக, தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்று, தந்தை செல்வநாயகம் சொல்லியிருந்தார். ஆனால், சுமந்திரன் இருக்கும் மட்டும் தமிழர்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் கருணா என்ற ஒருவரை உருவாக்கித்தான் அழிக்கப்பட்டது. அதேபோலத் தான், சுமந்திரனையும் உருவாக்கி விட்டிருக்கின்றனரா என்று தெரியவில்லை. இவ்வாறு நான் கூறுவதால், எனக்கு என்ன பிரச்சினை வருமென்று தெரியவில்லை.

“வேட்பாளர் தெரிவு தொடர்பில் நான் சுமந்திரனிடம் கேட்டபோது, கட்சியில் இருந்தே என்னைத் தூக்குவதாகச் சொன்னார். அதைத் தான் அவரால் செய்ய முடியும். ஆனால், முடிந்தால் அவர் அதனைச் செய்து பார்க்கட்டும் என்று நான் கூறுகிறேன்.

“இன்று, ஆளுமையுள்ள திறமையுள்ள, உணர்வுபூர்வமான பல பெண்கள் உள்ளனர். அவர்களை உள்வாங்க வேண்டும். நாம் சுயநலத்துக்காக அரசியல் நடத்தவில்லை. நியாயத்துக்காகப் போராடுகிறோம். கட்சியின் வேட்பாளர் தெரிவுக்காக, பல பெண்கள் விண்ணப்பம் போட்டிருக்கிறோம். அவர்களில் யாரைப் போட்டாலும் பரவாயில்லை. ஆனால், யாரையும் பின்கதவால் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது.

“இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனுக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதம் உருக்கமாக இருந்ததாக அவர் சொல்லியிருந்தார். நான் சொன்னதையும் செய்ததையும் தான் அதில் எழுதியிருந்தேன். அதை விட, செய்யாத வேறொன்றும் எழுதவில்லை. ஆகவே, இவ்வளவையும் நாம் செய்துவிட்டு, இந்த அநீதிகளைக் கண்டு நாம் விட்டுவிட்டுப் போக முடியாது.

“இங்கு, எனக்கு அல்லது மற்றவர்களுக்கு நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்காமல் இருக்க முடியாது. அவ்வாறு இங்கே நியாயம் கேட்காமல் நாடாளுமன்றம் சென்று அங்கே என்னத்தைச் செய்ய மடியும்? அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பி, நீதிக்காகப் போராடுவோம். அதனையே நாம் இங்கும் செய்கிறோம்.

“ஆகவே, எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதனடிப்படையில் எமது மூத்தத் தலைவர்கள் சரியான நியாயத்தைக் கொடுப்பார்கள் என நம்புகிறேன். எனவே, எமது தலைவர்கள் தான் இதற்குச் சரியான முடிவை எடுக்க வேண்டும். இதற்கான தீர்வைத் தரவேண்டும். அவ்வாறு தருவார்கள் என நம்புகிறேன். கட்சியிலிருக்கும் மாவை சேனாதிராசா, இரா. சம்பந்தன், துரைராஐசிங்கம் போன்றவர்கள் திறமையானவர்கள. அவர்கள், சரியான தீர்வைத் தருவார்கள்.

“ஆனால் இன்றைக்கு, உண்யாகவே சுமந்திரன்தான் தமிழரசை வழிநடத்துகிறார். அது எல்லோருக்கும் தெரிகிறது. சசிகலா வந்த நேரம்கூட பரவாயில்லை. கணவனை இழந்துவிட்டார். பாதிக்கப்பட்டவர். அதனால் அவர் வரலாம். ஆனால், இவை எதுவும் இல்லாமல், புதிதாக இன்னுமொருவர் வரமுடியாது. அதனைப் பின்கதவாலும் கொண்டுவர அனுமதிக்க முடியாது.

“நாம் கட்சியின் ஐனநாயக முறைப்படியே செயற்படுகிறொம். அதற்கமையவே வேட்பாளர்களுக்கான விண்ணப்பத்தை, தலைவர் மற்றும் செயலாளருக்கு அனுப்பியிருந்தோம். அதனை விடுத்து, கட்சியின் ஊடகப் பேச்சாளருக்கும் அந்த விண்ணப்பப் படிவத்தைக் கொடுக்க வேண்டுமா, அவ்வாறு பேச்சாளருக்குக் கடிதம் கொடுக்க முடியுமா?

“ஆகவே நாம் மீண்டும் மீண்டும் கேட்பது, கட்சியின் ஐனநாயகத்தைப் பேணுங்கள். சரியான சட்டதிட்டங்களின்படி நடவுங்கள். ஆனால், வேட்பாளர் விடயத்தில் அப்படி நடக்கவில்லை. ஆகவே, எங்களுக்குச் சரியான நீதியைத் தாருங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X