2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

‘தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர்க​ளை ஏமாற்றிவிட்டனர்’

Yuganthini   / 2017 ஜூலை 31 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், அரசியலில் நிலவும் குழப்பகரமான சூழ்நிலைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், தற்போது அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழ் அரசியல் தலைவர்கள் தவறிவிட்டனர். அதன் விளைவாக தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்”  என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து, அவர் இன்று (31) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“[தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதால்] தமிழ் மக்களுக்கு ஒரு சரியான தலைமை தேவைப்படுகின்றது. அதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி, களத்தில் இறங்கிச் செயற்பட்டு, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு, நிரந்தரமானதொரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு, திடசங்கற்பம் பூண்டுள்ளது.

“தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகிய காலம் தொட்டு, இன்று வரை, வன்முறைகளில் ஈடுபடாமலும், வன்முறைக்குத் துணைபோகாமலும் செயலாற்றிக்கொண்டு வருகின்றது.

“சர்வதேச சமூகத்தின் பார்வையில், தமிழ் மக்களின் ஜனநாயகத்துக்கான குரலாகச் செயற்பட்டு, பல தியாகங்களைச் செய்த கட்சி என்ற நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

“எனவே, அத்தகைய பாரம்பரியமிக்க கட்சியைப் புனரமைப்பு செய்வதற்கான முதற் கட்டமாக, தமிழர் விடுதலைக் கூடடணியின் வருடாந்த பொதுக் குழு கூட்டம், எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதி காலை 10 மணிக்கு, நாச்சிமார் கோவிலடி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள எமது கட்சியின் தலைமைச் செயலகத்திலும், அதனைத் தொடர்ந்து தேசிய மாநாடு , எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதி காலை 10 மணிக்கு, கல்லூரி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்திலும் நடைபெறும்.

“அதனால், எமது கட்சியைச் சேர்ந்த அங்கத்தவர்கள் அனைவரையும், எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதிக்கு முன்னர் எமது அலுவலகத்தில் தொடர்புகொண்டு, அங்கத்துவத்தைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

“எமது கட்சியில் இணைந்து செயற்பட விரும்பும் அனைத்து தமிழ் மக்களையும், 7ஆம் திகதி நடைபெறும் எமது மாநாட்டில் கலந்துகொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.

“அத்துடன், அரசாங்கம் தேர்தலில் 25 சதவீத ஒதுக்கீட்டைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கத் தீர்மானம் எடுத்திருப்பதால் எமது மகளிர் அணியினர் மற்றும் பெண்களுக்கான அமைப்புகள், மாநாட்டில் கலந்துகொண்டு எம்முடன் இணைந்து செயற்பட வருமாறும் அன்புடன் அழைக்கின்றோம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .