2025 ஜூலை 30, புதன்கிழமை

’தமிழ் இளைஞர்கள் பொலிஸில் இணைய வேண்டும்’

Editorial   / 2017 ஜூலை 15 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதன் ஊடாக தமிழ் மக்களுக்கு சிறந்த சேவை ஆற்றலாம் என்பதுடன், வெளியாரின் ஆதிக்கத்தையும் குறைக்கலாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்.மாவட்டத்தில் உள்ள 18 பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளை, வடமாகாண முதலமைச்சர், தனது அலுவலகத்தில் நேற்று (14)  சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

மேற்படி கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொலிஸ் சேவையில் தற்போது 500 வெற்றிடங்கள் உள்ளதாக கூறுகிறார்கள். அதேசமயம் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இதற்காக பொதுமக்களுக்கு போதுமான அறிவுறுத்தலை வழங்கவேண்டியது அவசியமாகும்.

“மேலும், எமது இளைஞர்கள் பொலிஸ் சேவையில் போதுமான அளவில் இல்லாமையினால் வெளிமாகாணங்களை சேர்ந்த பெரும்பான்மை இனம் சார்ந்த பொலிஸார் எமது பகுதியில் சேவையாற்றவேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது. எமது இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இருந்தால் வெளி மாகாணங்களை சேர்ந்தவர்கள் அவர்களுடைய மாகாணங்களுக்கு திரும்பி சென்று சேவையாற்றுவார்கள்.

“அதேபோல் பொலிஸ் அதிகாரம் எமக்கு வரவேண்டுமாக இருந்தால் கூட எங்கள் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் சேர வேண்டும். கடந்தகாலங்களில் பொலிஸ் தொடர்பான தவறான நிலைப்பாடு எங்கள் மக்களிடம் இருந்தது. ஆனால், அது போர்கால நிலமை. அவ்வாறான நிலமை இன்றிருக்க இயலாது. எனவே, பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொள்ளலாம் அதில் தவறில்லை.

“மாவட்ட செயலகத்திடமிருந்து மணல் அகழ்வுக்கான அனுமதியை பெறுபவர்கள் அவற்றை கொண்டு பல இடங்களில் தேவைக்கு அதிகமாக மணலை கொண்டு செல்கின்றார்கள் என பொலிஸார் தரப்பில் கூறப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பான ஜனாதிபதியுடனும் பேசப்பட்டிருக்கின்றது. அது தொடர்பாக மேலும் மாவட்ட செயலாளருடனும் ஜனாதிபதியுடனும் பேசப்படும்.

“யாழ். நகர் பகுதி கழிவுகள் தொடர்பாக பேசப்பட்டது. அதற்கு ஏற்கெனவே மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது கழிவுகளை கீரிமலையில் பிரத்தியேக இடத்தில் கொட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றமையை கூறியிருக்கிறேன்.

“பொலிஸார் வசம் உள்ள தனியார் காணிகள் தொடர்பாக பேசியிருக்கின்றோம். குறிப்பாக பொலிஸாரிடம் உள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளை மக்களிடம் மீள வழங்குவதற்கு பொலிஸார் இணங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு மாற்று காணிகள் இல்லை. எனவே, மாற்று காணிகளை பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக நாங்கள் கூறியிருக்கின்றோம்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .