2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அம்பலப்படுத்துவதற்கான காலம் வந்துவிட்டது’

Editorial   / 2017 நவம்பர் 05 , பி.ப. 07:29 - 1     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன், எஸ்.நிதர்ஷன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாதகமான செயல்களை அம்பலப்படுத்துவதற்கு, எமக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

மேலும், “சம்பந்தனிடம் இருந்து, தமிழ் மக்களையும், பொதுவாக இலங்கையர்களையும் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில், அவர் நேற்று  (04) வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலங்கையர்கள், தமது இன வேறுபாடுகளைக் கைவிட்டு, தாங்கள் ஆழ்ந்த நித்திரையிலிருந்து விழித்தெழுந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் அங்கியை அணிந்து செயற்படுகின்ற இரா.சம்பந்தனிடம் இருந்து, தமிழ் மக்களையும், பொதுவாக இலங்கையர்களையும் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. எதுவித சந்தேகமுமின்றி இரா.சம்பந்தன், மிகவும் திறமைசாலி மட்டுமல்லர், விவேகமுள்ளவர். அவருக்கு எங்கே, எப்போது, எப்படிச் செயற்படவேண்டுமென்பதை பற்றி நன்கு அறிந்தவர்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அங்கியைப் பாவித்து நன்றாக அனுபவித்தது மட்டுமல்ல, அதன் ருசியை அறிந்து தான்தோன்றித்தனமாக, அல்லது தனது கட்சியைச் சார்ந்த ஒருசிலருடன் சேர்ந்து, ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களாளிக் கட்சி உறுப்பினர்களைப் புறக்கணித்து, தீர்மானங்களை எடுத்து வருகிறார்.

“மக்களை எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளும், இவருடைய தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கின்றார்கள்.

“மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றப் பதவியின் ஊடாக மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யத் தவறியமையால், தனது நாடாளுமன்றப் பதவியையும், எதிர்க்கட்சிப் பதவியையும் துறப்பது கௌரவமான நடவடிக்கையாகும்.

“மேலும், தமிழ் மக்கள் மட்டுமின்றி, சகல இன மக்களினதும் இன்றைய கடமை யாதெனில், காலம் கடந்தாலும் அனைவரும் ஒன்றுசேர்ந்து, மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களுக்கும் தொடர்ந்து படும் அல்லல்களுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 1

  • Sumathy M Sunday, 05 November 2017 02:42 PM

    தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இவ்வளவு காலமும் அரசுடன் கொஞ்சி குலாவி அனுபவித்த அனுபவித்த தேன்நிலவு கசக்கும் .இந்த அரசும் எங்களை ஏமாற்றிவிட்டது .சிங்களவர்களை மேலும் நம்ப முடியாது,தமிழன் ஒற்றுமையை சர்வதேசத்துக்கு காட்டவேண்டும் போன்ற கோஷங்களுடன் மக்கள் முன் வருவார்கள் .ஆனால் இம்முறையும் எமது மக்களை ஏமாற்ற முடியாது .அந்தளவுக்கு கூட்டமைப்பினர் மக்கள்முன் அம்பலமாகியுள்ளனர் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .