2025 ஜூலை 23, புதன்கிழமை

‘தீர்விலிருந்து தமிழ் மக்களைத் திசை திருப்ப சதி’

Editorial   / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கடந்த சில மாதங்களாக வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பம், தமிழ் மக்களைத் திசை திருப்பும் சதியே தவிர, வேறு எதுவும் அல்ல என்று வடக்கு முன்னாள் விவசாய அமைச்சரும், மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

பொ. ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நேற்று (07) இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஐங்கரநேசன் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

“நீண்ட நெடிய யுத்தத்துக்குப் பின்னர் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், அரசியல்வாதிகளினது விவாதப் பொருளாகவும் ஊடகங்களினதும் தமிழ்மக்களினதும் பேசுபொருளாகவும் புதிய அரசமைப்பு தொடர்பான விடயங்களே இருக்க வேண்டும். இதனை முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு வடக்கு மாகாணசபைக்கு உண்டு. அப்போதுதான், புதிய அரசமைப்பின் சாதக பாதகங்களை உணர வைத்து, அடுத்த கட்ட நகர்வுகளுக்கு தமிழ் மக்களைத் தயார் செய்ய முடியும்.

தமிழ் மக்கள், புதிய அரசமைப்புத் தொடர்பாக விழிப்புணர்வு பெற்று விட்டால், அரசாங்கத்துக்கு எதிராக திரண்டு விடுவார்களோ என்ற அச்சம் அரசாங்கத்தின் மத்தியில் உள்ளது. அதனால்தான், மாகாண சபையை முடக்கும் நோக்கில் திட்டமிட்டுக் குழப்பங்கள் உருவாக்கப்படுகின்றன. தெரிந்தோ தெரியாமலோ எம்மவர்களே இச்சூ ழ்ச்சிக்குப் பலியாகியும் வருகின்றனர். இக் குழப்பங்களால் அரசியல் தீர்விலிருந்து விலகி எல்லோரினது கவனமும் மாகாணசபை மீது திருப்பி விடப்பட்டிருக்கிறது.

ஜனநாயக முறையிலான போராட்டங்கள் கூட தமிழ் மக்கள் மத்தியில் நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் நிலமீட்புக்காகவும் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டங்களையும் வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணிகளையும், ஜனநாயகப் போராட்ட எழுச்சியின் ஒரு பொறியாகவே அரசாங்கம் பார்க்கிறது. இதனை ஆரம்பத்திலேயே அணைத்துவிட வேண்டும் என்ற நோக்கிலேயே குற்றச் செயல்களின் பின்னால் முன்னாள் போராளிகள் என்ற புரளியைக் கிளப்பி விட்டிருப்பதோடு, வன்முறைகளைக் கட்டுப்படுத்தல் என்ற போர்வையில் இராணுவத்தையும் வீதிக்கு இறக்கி விட்டுள்ளது.

 

வன்முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், குற்றச் செயல்களை காவல்துறை கொண்டு கட்டுப்படுத்த முடியும். அதை விடுத்து இராணுவத்தை மீண்டும் வீதிக்கு இறக்கியிருப்பதன் மூலம் இளைஞர்களை உளவியல் ரீதியான அச்சத்துக்கு ஆளாக்கி அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தையும் ஒன்றுகூடலையும் தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .