2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

தேர்தல் முடியும் வரை ’வாய் பொத்தி இருக்க முடியாது’

Editorial   / 2018 ஜனவரி 17 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால வரைவு அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்கும் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், பெப்ரவரி 10ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வரை காத்திருக்க முடியாது என, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில், நேற்று (16) மாலை இடம்பெற்ற, அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை தொடர்பாக, மக்களுக்குத் தௌிவுபடுத்தும் கூட்டத் தொடரின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன், மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சட்டரீதியான ஆய்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டம், யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த போதிலும், தேர்தல் ஆணைக்குழுவின் கட்டளைக்கமைய, தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர், கட்டுப்பாடுகளின் கீழ், வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதைக் குறிப்பிட்டே, முதலமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.

"இவ்வாறான தெளிவுபடுத்தும் கூட்டங்கள் வடகிழக்கு மண்ணில் காலத்திற்குக் காலம் இனித் தொடர்ந்து நடப்பன. எமது பொது மக்களின் அரசியல் அறிவை வளர்ப்பதே எமது குறிக்கோள். இதில் கட்சி அரசியல் எதுவும் இல்லை.

சிலர், தங்கள் கட்சிகள் பற்றியும் அதில் தமது எதிர்காலப் பங்கு பற்றியும் சதா சிந்தித்துக் கொண்டிருப்பதால், எங்களையுங் கட்சி ஆர்வம் கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்தி, நாமும் கட்சி ரீதியாக நலம் பெறப் பார்க்கின்றோம் என்று, எமக்கெதிராகச் சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள். தேர்தல் காலத்தில் இவ்வாறான கூட்டங்களை நடத்தலாமா என்று கேட்கின்றார்கள்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், எந்தத் தேர்தல்க் கட்சி பற்றியோ, அவற்றின் கொள்கைகள் பற்றியோ, செயற்பாடுகள் பற்றியோ விமர்சிப்பதற்காக, தாங்கள் இங்கு கூடியிருக்கவில்லை எனவும், இவ்வாறான கூட்டங்களைத் தடுக்க நினைப்பது, மக்கள் அறிவு பெறுவதைத் தடுப்பதாகவே கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

"பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, நாம், வாய் பொத்தி கை அடக்கி நிற்க வேண்டும் என்று நினைப்பது, இரக்கமற்ற செயல். மார்ச் மாதத்தில் இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் இடைக்கால அறிக்கை பற்றி நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அவை பற்றிப் பேசினால் தேர்தலைப் பாதிக்கும் என்று எண்ணுவது, மடமையாகும். அவை பற்றி மக்கள் அறிந்திருப்பது அவசியம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .