2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

நெடுந்தாரகை: சேவையில் இல்லை

Gavitha   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

நெடுந்தீவு மக்களுக்காக ஆரம்பித்து வைக்கப்பட்ட நெடுந்தாரகை படகுச் சேவையானது, வெள்ளோட்டத்தின் பின்னர் சேவையில் ஈடுபடவில்லை என, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற சபை அமர்வின்போது தெரிவித்தார்.

“நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த  போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலேயே, இந்த படகுச் சேவை கொண்டுவரப்பட்டது.

ஆனால் அந்தப் படகு, வெள்ளோட்ட நிகழ்வுக்குப் பின்னர் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை. இதனால், வடக்கு மாகாண சபையே தங்களை வஞ்சித்துவிட்டதாக, நெடுந்தீவு மக்கள் கவலை வெளியிடுகின்றனர். எனவே, கூடுதலாகக் கவனமெடுத்து, இச்சேவையை விரைவாக ஆரம்பிக்க, வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, அவர் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், “அந்தச் சேவையை ஆரம்பிப்பதில் சில பிரச்சினைகள் உள்ளன. அது தொடர்பிலான விசாரணையொன்றை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதியன்று வெள்ளோட்டம் இடம்பெற்றதுடன், அதிலிருந்து 2 நாட்கள் சேவையில் ஈடுபட்ட நெடுந்தாரகைப் படகு சேவைக்கு, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிகட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையிலான பயணிகள் சேவையில் ஈடுபடும் வேறு படகுகள், பயணிகளிடம் 60 ரூபாய் அறவிடுவதுடன் பொதிகளுக்கு கட்டணங்கள் அறவிடுவதில்லை. ஆனால், நெடுந்தாரகைப் படகுச் சேவை இடம்பெற்ற இரு நாட்களும், 80 ரூபாய் அறவிடப்பட்டதுடன், பொதிகளுக்கும் தனியான கட்டணங்கள் அறவிடப்பட்டன.

குறிகட்டுவான் – நெடுந்தீவுக்கிடையே பயணிகள் சேவையை மேற்கொள்வதற்காக, உலக வங்கியின் நிதிப் பங்களிப்பிலும் நெல்சிப் திட்டத்தின் கீழும், 150 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு நெடுந்தாரகைப் படகு, கடந்த 20 ஆம் திகதி சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X