Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜூன் 17 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி ஒன்று, மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அச்செயலணியினால் பெற்றுக்கொள்ளப்படும் கருத்துக்கள், அரசாங்கத்திடம் அனுப்பி வைக்கப்படும் போது, அவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமையளிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தெரிவித்தார்.
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவில், நேற்று வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறியதாவது,
'ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், அரசாங்கம் சில உறுதி மொழிகளை வழங்கியுள்ளது. அந்த உறுதி மொழிகளுக்குள், காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகம், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஆணைக்குழு, விசேட வழக்கு தொடுப்போருக்கான நீதிப்பொறிமுறை, இழப்பீடுகளுக்கான அலுவலகம் போன்றவற்றை நியமிப்பதாக, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது அரசாங்கம் உறுதிமொழியளித்திருந்தது.
ஆகவே, அந்த அலுவலகங்களை நியமிப்பதற்கு, அரசாங்கமானது கடந்த தை மாதம் 26ஆம் திகதியன்று, நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி ஒன்றை நியமித்தது. அந்த செயலணியின் செயற்பாடு என்னவென்றால், குறித்த அலுவலகங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்று மக்களினுடைய கருத்துக்களை கேட்டு அதனை அரசாங்கத்துக்கு வழங்குவதாகும்.
பிரதமரால் நியமிக்கப்பட்ட 11 அங்கத்தவர்களைக்கொண்ட நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியானது, கடந்த 11, 12, 13ஆம் திகதிகளில் „வலயச் செயலணி' ஒன்றை உருவாக்கியது. குறித்த „வலய செயலணியின்' செயற்பாடு என்னவென்றால், மாவட்டத்தில் உள்ள மக்களிடம் சென்று கலந்துரையாடல்களை மேற்கொண்டு குறித்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களை ஆவணப்படுத்துவதும் அவற்றை அரசாங்கத்துக்கு வழங்குவதுமாகும்.
நாங்கள் தற்போது ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். கடந்த காலத்தில், அதாவது 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பிற்பாடு, எல்.எல்.ஆர்.சி என்ற ஒரு ஆணைக்குழுவை அரசாங்கம் நிறுவியது. அதன் பின்னர், பரணகம ஆணைக்குழுவை நிறுவியது. ஆகவே, இந்த ஆணைக்குழுக்கள் எல்லாம் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டவை. மக்களின் கருத்துக்களை அவை கேட்கவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களைக் கேட்டு, அலுவலகங்கள் அமைக்க வேண்டும் என்றும் அந்த அலுவலகங்களிலே, பாதிக்கப்ட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்வாங்கப்படல் வேண்டும் என்றும் பல்வேறு வலியுறுத்தல்களை மேற்கொண்டதன் அடிப்படையிலும், உலக நாடுகளின் அழுத்தத்தின் அடிப்படையிலுமே, மேற்படி வலயச் செயலணியானது உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலணி, மக்களிடம் சென்று கருத்துக்களை பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில், மக்கள் சரியான கருத்துக்களை கூற வேண்டிய கட்டாய நிலை உள்ளது.
மக்களின் ஒத்துழைப்புக்களும் ஆதரவும் அச்செயலணிக்கு தேவைப்படுகின்றது. செயலணி உங்களை நோக்கி வருகின்ற போது உங்களின் ஆதரவையும் முக்கியமான கருத்துக்களையும் மிக உறுதியுடன் பதிவு செய்யுங்கள். அமைக்கப்படவுள்ள அலுவலகங்கள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என தெளிவாக எங்களிடம் கூறும் போது, அவை பலனுடையதாக காணப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .