2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நலன்புரி முகாம் மக்கள் உண்ணாவிரதம்?

George   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள 38 நலன்புரி முகாம்களில் வசித்து வருகின்ற மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதை வலியுறுத்தி, எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக நலன்புரி முகாம்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

ஒரு முகாமில் ஒரு கிழமை என்ற அடிப்படையில் 38 முகாம்களிலும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர்கள் கூறினார்கள்.

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற முகாம் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் முகாம் பிரதிநிதிகள் தொடர்ந்து கருத்துக்கூறுகையில், 'மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் மக்கள் கருத்தறியும் கூட்டம் ஆகியவறில் முதலில் மீள்குடியேற்றம் அதன் பின்னரே விமான நிலைய விஸ்தரிப்பு துறைமுக அபிவிருத்தி என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங்கஜன் இராமநாதன் ஆகியோருடன் இணைந்து மக்களால் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

ஆனால், தற்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மக்களின் எதிர்ப்பையும் மீறி பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது, முகாம் மக்கள் 6 மாதகாலத்துக்குள் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவேன் எனக்கூறினார். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி என்பதால் அவரை நாங்கள் நம்புகின்றோம்.

சர்வதேச நாடுகள் முதல் தென்னிலங்கை வரையில் அனைவரினது பார்வையும் எம்மீதே உள்ளது. அதனாலயே யாழ்ப்பாணத்துக்கு யார் விஜயம் செய்தாலும், நலன்புரி நிலையங்களுக்கும் விஜயம் மேற்கொள்கின்றனர்.

கடந்த 26 வருடங்களுக்கு மேலாக நாம் பல்வேறு வகையான போராடங்களை பல வடிவங்களில் முன்னெடுத்தும் இன்னமும் எமது சொந்த நிலங்களுக்கு செல்லவில்லை. 

கடந்த கால அரசாங்கங்கள் எமது பிரச்சினைகளை செவிமடுக்கவில்லை. ஆனால், தற்போது உள்ள நல்லாட்சி அரசாங்கம் எமது பிரச்சினைகளை கேட்டறிகின்றது. அதனால் தான் ஜனாதிபதி நேரடியாக எமது முகாம்களுக்கு வந்து எமது மக்களை சந்தித்து சென்றுள்ளார்.

தமிழ் கட்சிகள் அனைத்தும்  ஒன்றிணைந்து  எமக்காக  குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை விடுத்து, நான் எவ்வளவு செய்தேன்! நீ இவ்வளவு தான் செய்தாய்! என தமக்குள்ள பிளவுபட்டு மோதலில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு இல்லாமல் எமக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எம்மை எமது சொந்த மண்ணில் மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
அரசியல்வாதிகள் எம்மீது ஏறி நின்று அரசியல் செய்து தமது அரசியல் சுயலாபத்தை அடைகின்றார்கள். இனியும் அவர்களை நம்பிக்கொண்டு இருப்பதனால் எமக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. எங்களின் மீள்குடியேற்றத்துக்காக நாங்களே போராடவேண்டும். இனிமேல் நாங்கள் எவரையும் நம்பப்போவதில்லை. இதனடிப்படையிலேயே இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.

எமது போராட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கினால் மாத்திரமே கைவிடப்படும். மாறாக வேறு எவர் கோரினாலும் கைவிடப்போவதில்லை. தொடர்ந்தும் ஜனாதிபதியை நாங்கள் நம்புகின்றோம். நலன்புரி முகாம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் 6 மாதகாலத்துக்குள் மீள்குடியேற்றுவேன் என ஜனாதிபதி கூறிய காலஅவகாசம் இன்னமும் முடியவில்லை. நாங்கள் தொடர்ந்தும் அஹிம்சை ரீதியாக போராடி, எங்கள் நிலங்களுக்குச் செல்வோம் என நம்புகின்றோம்.

எமது போராட்டம் முடிவிலும் நாங்கள் எங்கள் சொந்த நிலங்களுக்கு போகமுடியாமல் போனால், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெள்ளைக் கொடியுடன் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் எமது காணிகளுக்குச் செல்வோம்.

எமது போராட்டத்துக்கு யாழ். பல்கலைகழக மாணவர்கள், பொது அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X