2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த உற்சவம்: 30 பேருக்கு மட்டுமே அனுமதி

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த உற்சவத்தை, இம்முறை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன், அத்துடன், அன்னதானத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த உற்சவம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம், யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த உற்சவம், ஜூன் 20ஆம் திகதியன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 18 நாள்கள் மகோற்சவக் கால பூஜைகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்போது, நயினாதீவு பகுதியிலுள்ள 30 அடியவர்களுக்கு மட்டுமே, இந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதேவேளை மகோற்சவக் காலத்தில், அன்னதானம் வழங்குவதற்கும் சுகாதாரப் பிரிவினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், “வெளிமாவட்டங்களில் இருந்து எவரும் கோவில் உற்சவத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அத்தோடு, யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தோரும் கலந்துகொள்ள முடியாது.

“எனவே, இதனைக் கருத்திற்கொண்டு, இம்முறை நயினாதீவு கோவில் உற்சவத்துக்கு வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் வருகைத் தருவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்” எனவும், மாவட்டச் செயலாளர் மகேசன் அறிவுறுத்தினார்.

இதேவேளை, இம்முறை தேர், சப்பற உற்சவங்கள் எதுவும் இடம்பெறமாட்டாதெனவும் கோவில் உற்சவங்கள் அனைத்தும் உள்வீதிக்குள்ளேயே இடம்பெற்று நிறைவுபெறுமெனவும், அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X