2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

புதிய அரசியல் சாசனத்துக்கான த.வி.கூ.வின் ஆலோசனைகள்

Sudharshini   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நாங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். நான் இந்த நாட்டில் 82 ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். அத்துடன், 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தவேளை எனது வயது 13. தமிழர் விடுதலைக்கூட்டணி 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பலமிக்க ஜனநாயகக் கட்சியாக திகழ்ந்தது.

ஜனநாயக உலகில் நாடாளுமன்றத்தினுடைய கால எல்லையை பொதுசன வாக்கெடுப்பு மூலம் நீடித்தமைக்கு ஆட்சேபனை தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவியை இராஜினாமா செய்ய பணித்து உலகசாதனையை ஏற்படுத்திய கட்சியே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும்.

2004ஆம் ஆண்டு சண்டித்தனத்தாலும் மிரட்டல்களாலும் ஆள்மாறாட்டத்தினாலும் அதிர்ச்சியடையக் கூடிய வகையில் சகல வேட்பாளர்களும்; தோல்வி அடைந்ததும் ஒரு உலக சாதனைதான். மீண்டும் ஒரு தேர்தலை நடத்துவதுதான் இதற்கு பரிகாரமாக இருந்தபோதும் அதற்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை என்ற காரணத்தினால் வேட்பாளர்களினாலும் தேர்தல் கண்காணிப்பு குழுக்களினாலும் விடப்பட்ட கோரிக்கை அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணி, நாடாளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்படுவதை வன்மையாக எதிர்க்கின்றது. அதேபோல் புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதையும் எதிர்க்கின்றது. அரசியல் சாசனத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்தால் போதுமென எமது கட்சி கருதுகின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அகற்றப்பட்டே ஆக வேண்டும். அதற்கு எமது முழு ஆதரவையையும் கொடுப்போம்.

அதேபோல எமக்கு வேண்டியதையும் வேண்டாததையும் அடையாளம் கண்டு தற்போதுள்ள அரசியல் சாசனத்தில் திருத்தங்களை மேற்கொள்ளமுடியும். அதன் மூலம் எமது நடவடிக்கையை இலகுவாக்க முடியும். அதிகளவு பிரச்சினையாகவுள்ள விடயங்கள் காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் போன்றவற்றின்; அதிகார பரவலாக்கல் சம்மந்தமானதாகும். அதற்கு சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் தீர்வு காணலாம். சமஸ்டி ஆட்சிமுறைமை, வடக்கும் கிழக்கும் இணைக்கப்படவேண்டும் என்பவற்றை நாம் எவ்வாறு சமாளிக்கப் போகின்றோம்.

1972ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகளாக முயற்சிசெய்து உருவாக்கப்பட்ட குடியரசு அரசியல் சாசனத்தில், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த 29ஆவது சரத்தோடு சோல்பரி அரசியல் சாசனம் முற்றுமுழுதாக நீக்கப்பட்டது. 1972இல் உருவாக்கப்பட்ட அரசியல்சாசனம் 1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியல் சாசனமாக மாற்றப்பட்டது.                            

அடிக்கடி அரசியல் சாசனத்தை மாற்றுவது ஏற்புடையதல்ல. அதுவும் ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் அரசியல் சாசனம் மாற்றப்படுவது மிகவும் மோசமான விடயமாகும். இப்போது உருவாக்கப்படப்போகும் அரசியல் சாசனம் எப்போதும் மாற்றப்படமாட்டாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. இந்திய அரசியல் சாசனத்தில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டிருந்தபோதும் அடிப்படை அரசியல் சாசனம் அப்படியே இருக்கின்றது. நாம் ஏன் எமது பிரச்சினைகளை அடையாளம் கண்டு எமக்கு ஏற்றவகையில், நேரத்தையும் கோடிக்கணக்கான பணத்தையும் செலவு செய்யாமல் ஒரு அனர்த்தத்தை எதிர்கொள்ளாமல் மாற்றங்களை செய்யமுடியாது.

இத்தகைய திருத்தங்கள் மூலம் சிறுபான்மையினருடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக அமையும் என்று நம்புகின்றோம். ஒரு காலமும் ஆதரவை பெறாமல் இருக்கப் போகின்ற பல்வேறு பிரேரணைகள் மக்களிடம் இருந்து வந்து கொண்டிருக்கின்றன.

சில கோரிக்கைகள் சந்திரனையும் சூரியனையும் கேட்கின்றன. சில கோரிக்கைகள் ஜனாதிபதி மற்றும் பிரதமரினால்; ஏற்றுக் கொள்ள முடியாதது. பல அமைச்சர்கள் கூட முன்வைக்கப்படும் கோரிக்கைகளை பகிரங்கமாக எதிர்க்கின்றனர். நியாயமாகத் தெரிகின்ற சில பிரேரனைகளைக்கூட எதிர்க்கட்சிகள் மிக வன்மையாக எதிர்க்கின்றன.

நான் உறுதியாக கூறுகின்றேன் உருவாக்கப் போகின்ற அரசியல் சாசனம் நாடாளுமன்றத்தை தாண்டிச் செல்லும் என்பது நடக்காத காரியம் என்பது மட்டுமல்ல சர்வஜன வாக்கெடுப்பு நடக்கின்ற வேளையில் பல எதிர்ப்புகளை எதிர்நோக்க வேண்டிவரும்.

எமது இனப்பிரச்சினைத் தீர்விற்கு இந்திய முறையிலான அரசியல் அமைப்பே சரியானதென நான் ஆலோசனை வழங்குகின்றேன்.

2005 ஆம் ஆண்டு தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது இந்திய அரசியல் அமைப்பு முறையே எமது இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார். மேலும், சில ஆண்டுகளுக்கு முன் மைத்திறிபால சிறிசேன, அன்றைய அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா, மேலும் ஐந்து முன்னாள் அமைச்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய சபாநாயகர் கருஜெயசூரிய, தற்போதய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்  மலிக்சமர விக்கிரம உட்பட பலர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் குழுவினரை சந்தித்து இந்திய முறையிலான அரசியல் அமைப்பை வலியுறுத்தினோம். இந்த கோரிக்கையை எதிர்த்து ஒருவரேனும் ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்பது மடடுமல்ல எமது ஆலோசனையை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்கள்.

ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்ற கொள்கையுடையவன் நான் என்றாலும், அதற்குப் பதிலாக ஏற்புடையதான இந்திய முறையிலான தீர்வை ஏற்பதே பொருத்தமானதாகும் என்ற கருத்தை கொண்டவனாகவே இருந்து வந்துள்ளேன்.

நாடு பிளவுப்படாமல் இருப்பதற்கு இந்தியா உத்தரவாதம் வழங்க வேண்டும் என கோரிவந்தேன். 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி அலரிமாளிகையில் பேராசியர் திஸ்ஸவிதாரன தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில்( யுPசுஊ) எமது பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போது, சமஸ்டி ஆட்சி முறைமை எமது இனப்பிரச்சினைக்குத் தீர்வாகப் பெறுவதற்கு நாம் போராடி வந்தது இரகசியமான விடயமல்ல. அதற்கு மாறாக சமஸ்டி என்ற சொல் அநேகருக்கு ஒவ்வாமையாக இருப்பதால் அதற்குப் பதிலாக இந்திய அரசியல் முறைமையை ஏற்கத்தயாராக இருக்கின்றேன்.

வடக்கு, கிழக்கு இணைப்பில் எமது நிலைப்பாட்டில் இருந்து நாம் மாற்றுக் கருத்து முன்வைக்கவில்லை என்பதையும் எடுத்துக் கூறி, ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் உத்தரவாதமாக வன்முறையை ஒதுக்கி வைத்துவிட்டு அகிம்ஷை முறையை பின்பற்றி மிக நட்பு ரீதியாக எமது நாட்டு பிரஜைகளை ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தர தீர்வை காணமுடியாது என்பதை பக்குவமாக தெளிவுப்படுத்தினோம். நாடு பிளவுப்பட்டுவிடும் என்ற ஐயம் கொண்டவர்களுக்கு அவர்களுடைய பயத்தை நீக்கி, எமது மக்களுடைய எண்ணத்திலே ஏற்பட்டுள்ள சமஸ்டி பற்றிய சிந்தனையை அவர்களுடைய உள்ளத்தில் இருந்து நீக்கச் செய்து மிக வலுவான ஐக்கிய இலங்கைக்கு ஆதரவு தேடுவோம்;.

இந்த சூழ்நிலையில் புதிய அரசியல் சாசன எண்ணத்தை கைவிட்டு எமது பிரச்சினைகளுக்கு தற்போதுள்ள அரசியல் சாசனத்தில் பொருத்தமான திருத்தங்களைக் கொண்டுவந்து தீர்த்துக் கொள்ளவேண்டும். இதற்குப் பதிலாக நிபுணர்கள் குழுவால் சிபாரிசு செய்யப்பட்ட அநேகமானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆலோசனைகளை வேண்டுமானால் ஏற்கலாம்.

அது ஏன் அமுல்படுத்தப்படவில்லை என்ற விடயம் இன்னும் மர்மமாகவே உள்ளது. திஸ்ஸவிதாரன அவர்களால் சமர்பிக்கப்பட்ட பிரேரணைகளை பரிசீலிக்கக் கூடிய ஒரு தீர்வே. நாம் மிக தீவிரமாக வலியுறுத்துவது யாதெனில் தென்னாபிரிக்காவின் அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள மிக வலுவான உரிமை சட்டத்தில் ( டீடைட ழக சுiபாவள)  ஒரு சில எமக்கு பொருந்தாவிடினும் எமது அரசியல் சாசனத்துடன் இணைத்துக்கொண்டு சட்ட மீறல்களுக்கு அதில் குறிப்படப்பட்டவாறு கடும் தண்டணையையும் அமுல் படுத்துவோமேயானால் எமது நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு பாதித் தீர்வு கிடைத்துவிடும். அந்த விசேட கோரிக்கையை நான் ஜனாதிபதியிடமும் முன்வைத்துள்ளேன்.

நாட்டின் நன்மை கருதி தமிழ் மக்களுக்கு கூறக்கூடிய புத்திமதி யாதெனில் நாம் முரண்ப்படுவதை கைவிட்டு எல்லோரும் ஒற்றுமையாக இந்திய முறையிலான அரசியல் அமைப்பை ஏற்று தென்னாபிரிக்க உரிமைகள், சட்டத்தை உள்வாங்கி எமது இனப்பிரச்சிகை;கு தீர்வு காண்போம். நாம் மீண்டும் வலியுறுத்துவது யாதெனில் சமஸ்டி முயையே மிகவும் சிறந்தது என்றும் ஆனால், இன்றைய சூழ்நிலையினை அனுசரித்து சமஸ்டி கொள்கைக்கு மாற்றாக இந்திய முறையிலான அரசியல் அமைப்பே விரும்பத்தக்கதாகும்.

அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் அனைவரும் இந்தப் பிரேரணையை வரவேற்று ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X