2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தியது யாழ். பல்கலைக்கழகம்

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தாடி வளர்த்தல் மற்றும் மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் புடவை அணிதல் ஆகிய கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் விரும்பினால் மாத்திரம் அவற்றைப் பின்பற்றலாம் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, இன்று வெள்ளிக்க்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வருவதாக, கலைப் பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகின.

கல்விசார் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், விரிவுரை மண்டபங்களுக்கு டெனிம் ஜீன்ஸ் மற்றும் டிசேட் அணிந்து வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தாடியுடன் விரிவுரைகளுக்கு வருவதும் தடை செய்யப்படுவதாகவும், மாணவிகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புடவை அணிந்து விரிவுரைகளுக்கு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்ததுடன், இவை பேரவையில் எடுக்கப்பட்ட முடிவாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், பேரவையில் அவ்வாறு ஒரு முடிவு எடுக்கப்படவில்லையெனவும், இவ்வாறான ஆடைக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் கலைப்பீடாதிபதியுடன் இன்று வெள்ளிக்கிழமை (26) தமிழ்மிரர் தொடர்புகொண்டு கேட்டபொழுது, 'விதிமுறைகள் மாணவர்களை துன்புறுத்துவதாக இருக்கக்கூடாது. நாங்கள் கட்டாயமாக எந்த அறிவித்தலையும் விடவில்லை. இவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்று, பேரவையில் கூறினோம். அதிலும் தாடியுடன் மாணவர்கள் விரிவுரைகளுக்கு வருவது அவர்களின் தனிப்பட்ட விடயம். அதில் நாங்கள் தலையிடமுடியாது' என்றார்.

'மாணவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள் என்றில்லை. நடைமுறைகளால் மாணவர்கள் துன்புறுத்தப்படக்கூடாது. ஆடைகள் தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. கட்டாயப்படுத்துவது எங்கள் நோக்கமில்லை.

முஸ்லிம் மாணவிகள் தங்கள் கலாசாரத்தை பேணுவதை வரவேற்கின்றோம். மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் கருத்துக்களை கூறினோம். அதனைச் சிந்திக்கக் கோரினோம். இந்த நடைமுறைகளை பேணுவதற்கு மாணவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X