2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

புதிய சட்டமூலம் தமிழர்களை பாதிக்கும்

Gavitha   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கதால் தயாரிக்கப்பட்டு,  மாகாண சபைகளின் அங்கிகாரத்தைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அபிவிருத்திச் சட்டமூலம், மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிப்பதாகவும், அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களைப் பாதிப்பதாகவும் உள்ளது. இதனாலேயே, அதனை, வடக்கு மாகாணசபை நிராகரித்துள்ளது” என்று வட மாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, கூட்டுறவு உதவி ஆணையாளர் பணிமனைக் கட்ட திறப்புவிழாவில் புதன்கிழமை கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “புதிய அரசியலமைப்புச்  சட்டமொன்றை உருவாக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் அரசாங்கம், அதற்கு முன்னதாக, நிலையான அபிவிருத்திச் சட்டம் ஒன்றை அவசரமாக, நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த நிலையான அபிவிருத்திச் சட்டம், இலங்கையை அபிவிருத்திப் பாதையில் விரைந்து முன்னேற்றுவதற்காகவே கொண்டு வரப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இதற்கான சட்டமூலத்தை நாங்கள் நிராகரித்திருப்பதால், வடக்கு மாகாணசபை அபிவிருத்திக்குத் தடையாக உள்ளது என்று அரசாங்கத் தரப்பு எங்களைக் குற்றம் சாட்டக் கூடும்.

அபிவிருத்திக்கு நாங்கள் ஒருபோதும் தடையானவர்கள் அல்லர். அதுவும், போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற ரீதியில் அபிவிருத்தித் திட்டங்களை வரவேற்பதற்குத் தயாராகவே உள்ளோம். ஆனால், அபிவிருத்தியின் பெயரால்,  தமிழ்மக்களின் உரிமைகளை, மாகாணசபைக்கு உள்ள சொற்ப அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறிப்பதை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசாங்கம், அந்நிய முதலீடுகளையும் ஏற்றுமதியையும் ஊக்குவிக்கும் நோக்கில், தேசியக் கொள்கையொன்றை உருவாக்க இருக்கிறது. இதன்படி வட -கிழக்குப் பொருளாதார வாயில், தென்மேற்குப் பொருளாதார வாயில், மலைநாட்டு உபபொருளாதார வாயில் என்று இலங்கை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அவற்றை அமுலாக்குவதற்கு உருவாக்கப்படவுள்ள அபிவிருத்தி பேரவையில், 11 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இவர்களில் மூன்று பேர் மாத்திரமே மாகாணசபைகளின் பிரதிநிதிகளாக இருப்பதுடன், இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களும் ஒவ்வொருவரைப் பெயர் குறிப்பிட்டுப் பிரேரிக்க வேண்டும்.

இவர்களில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் மூன்று பிரதிநிதிகளை ஜனாதிபதி தெரிவு செய்வார். இம்முறையில், அபிவிருத்திப் பேரவையில் வடக்கு, கிழக்குக்கான நிரந்தர உறுப்புரிமை இல்லை. சுழற்சி முறையில் கிடைக்கின்ற பிரதிநிதித்துவமும் எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது.

அபிவிருத்திப் பேரவை, எமது மாகாணத்தின் திட்டங்களைத் தீர்மானிக்கும் வகையிலேயே நிலையான அபிவிருத்திச் சட்டமூலம் வரையப்பட்டுள்ளது. இதனாலேயே, அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தும் இந்த நிலையான அபிவிருத்திச் சட்டமூலத்தை நாங்கள் நிராகரித்துள்ளோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X