2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பட்டாச்சாரியர்கள் வெளியேற்றம்: மீண்டும் சிவாச்சாரியார்கள்

Gavitha   / 2015 நவம்பர் 09 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நேசமணி

யாழ்ப்பாணம் வண்ணை வெங்கடேச வரதராஜப்பெருமாள் ஆலயத்தில், இந்திய பட்டாச்சாரியர்கள் வெளியேற்றப்பட்டு மீண்டும் பழையபடி அந்தணர் சிவாச்சாரியார் ஞாயிற்றுக்கிழமை (08) முதல் பூசை செய்யத் தொடங்கியுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்ற இந்திய பட்டாச்சாரியர்களின் பூசை, கடந்த 7ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும் சிவாச்சாரியார்கள் முன்னர் போன்று பூசைகளைத் தொடங்கியுள்ளனர்.

மேற்படி ஆலயத்தில் அந்தண சிவாச்சாரியார்கள் பூசை செய்து வந்த நிலையில், ஆலய பரிபாலன சபையினர், அவர்களை நீக்கிவிட்டு இந்தியாவிலிருந்து பட்டாச்சாரியர்களைக் கொண்டு வந்து வைணவ முறைப்படி பூசைகளை ஆரம்பித்தனர்.  

திடீரென்று ஆலயத்துக்கு பட்டாச்சாரியர்களைக் கொண்டு வந்து பூசை முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திய ஆலய நிர்வாகத்தின் முடிவுக்கு, பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அத்துடன் அகில இலங்கை சைவ மகா சபை உள்ளிட்ட பல சைவ அமைப்புக்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், மேற்படி ஆலய நிர்வாகத்தின் நடவடிக்கையில் அதிருப்பியடைந்த மக்களில் சிலர், புதிய நிர்வாகக் குழுவொன்றை அமைத்ததுடன் அந்தக் குழு ஊடாக மாவட்டச் செயலர் உள்ளிட்டோருக்கும் இந்த விடயத்தைக் கொண்டு சென்றனர்.

இதன் பயனாக பழையபடி சிவாச்சாரியார்கள் பூசை செய்யத் தொடங்கியுள்ளனர். ரமணிக்குருக்கள் நேற்றுக் காலை 6 மணிக்கு மீண்டும் பூசைகளை ஆரம்பித்தார்.

இந்த மாற்றம் தொடர்பாக ஆலய பரிபாலன சபையுடன் தொடர்புகொண்டு கேட்டபோது,

பரீட்சார்த்த முயற்சியாகவே இந்தியாவிலிருந்து பட்டாச்சாரியர்களைக் கொண்டு வந்து பூசைகளை மேற்கொண்டதாகவும் அவர்களுக்கான செலவுகள் அதிகமாக உள்ளதால் மீண்டும் யாழ்ப்பாணத்திலுள்ள அந்தண சிவாச்சாரியர்களைக் கொண்டு பூசைகளை ஆரம்பித்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .