2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘படையினருக்கான நிதியை பாதுகாப்பு அமைச்சில் இருந்தே வழங்க வேண்டும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

காணிகள் விடுவிப்பதற்கு தமக்கு பணம் தேவையென படைத் தரப்பினர் கோருகின்ற போது, அதற்கான நிதியை மீள்குடியேற்ற அமைச்சிலிருந்து அல்லாமல் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்தே அரசாங்கம் வழங்க வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஏனெனில் மக்கள் தான் மீள்குடியேற்றப்படுகின்றனர். இராணுவத்தினர் இடமாற்றத்தையே செய்கின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில், முப்படையினர் மற்றும் பொலிஸார் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல் ஆகியன தொடர்பில் ஆராய்வதற்கான உயர் மட்டக் கூட்டம், மாவட்டச் செயலாளர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில், நேற்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துக் கருத்துத் தெரிவித்த அவர், படையினர் வைத்திருந்த காணிகளில் அவர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்களைச் செய்த பணம் அரசாங்கத்துக்கு தான் சென்றிருக்கின்றனவெனத் தெரிவித்தார்.

ஆகவே, தற்போது காணிகளை விடுவதற்கு பணம் தேவைப்படுவதால் அந்தப் பணத்தையே அவர்கள் கோருகின்றனரெனவும் ஆகவே இடமாற்றத்துக்கான நிதியை அரசாங்கம் படைத்தரப்பினர்களுக்கு ஒதுக்கிக் கொடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், அது பாதுகாப்பு அமைச்சின் செலவீனத்தினூடாகவே தான் இடம்பெற வேண்டுமெனத் தெரிவித்த அவர், அதனை விடுத்து மீள்குடியேற்றத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து எடுக்க முடியாதெனக் கூறினார்.

ஏனெனில் கடந்த காலங்களில் அவ்வாறே எடுக்கப்பட்டிருக்கின்றதெனவும் ஏனெனில் இது இராணுவத்தினருக்கான குடியேற்றமல்லவெனவும் அவர் தெரிவித்தார்.

இது  இராணுவத்தினருக்கான இடமாற்றமே ஒழிய, அது மக்களுக்கானது அல்ல. அது குடியேற்றமாகும். ஆகவே மீள்குடியேற்ற நிதி மக்களுக்கான மீள்குடியேற்றத்துக்கே பயன்படுத்தப்பட வேண்டுமெவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் போது படைத் தரப்பு தமக்கு எவ்வளவு நிதி தேவை எனக் கோரியள்ளனரா என சுமந்திரனிடம் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளித்த அவர், தமக்கு எவ்வளவு நிதி தேவை என அரசாங்கத்தினருக்கே அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அது எவ்வளவு என்று எங்களுக்கு தெரியாதென்றார்.

மேலும், காணிகளை விடுவிப்பதாயின் கோட்டையை வழங்க வேண்டுமென்று கேட்கப்பட்டதா எனக் கேட்ட போது, அதைப் பற்றி ஏதும் கதைக்கப்படவில்லையென்று சுமந்திரன் பதிலளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X