2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

‘பலவீனத்தின் வெளிப்பாடே, எம் மீதான விமர்சனம்’

Editorial   / 2018 பெப்ரவரி 27 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

“தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பலவீனமானதொரு தூரத்துக்கு தள்ளப்பட்டிருப்பதன் வெளிப்பாடே எங்கள் மீதான விமர்சனம்” என தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

‘கஜேந்திரகுமார் ஒரு குழப்பவாதி’ என ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கஜேந்திரகுமாரிடம் கேள்வியெழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் எங்களைக் குழப்பவாதிகளாக நினைத்திருந்தால் தேர்தலில் எங்களை ஆதரித்திருக்க மாட்டார்கள். கூட்டமைப்பின் வாக்குகள் கூட்டமைப்பிடம் தான் இருந்திருக்கும். கூட்டமைப்பு பிழையான வழியில் சென்று கொண்டிருக்கின்றதென்பதை தமிழ் மக்கள் தான் மிகத் தெளிவான வகையில் தேர்தலில் காட்டியிருக்கின்றனர்.

ஆகவே தமிழரசுக் கட்சியின் தலைவர் மிகப் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். நாங்கள் தமிழரசுக் கட்சிக்கு மாறானவர்கள் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் கூறிக்கொள்கின்றோம். ஆனால் அந்த தலைமைத்துவம் தமிழரசுக் கட்சியை அழிக்கிறது. அது தான் உண்மை.

இந்த தேர்தலில் கிடைத்த முடிவுகளை ஆழமாக அவதானிக்காவிடில், இன்னும் கூடுதலான பின்னடைவுகளைத் தான் அந்தக் கட்சி சந்திக்க வேண்டி வரும்.

அதிலும் துரதிஷ்டவசமாக இந்த தலைமைத்துவத்தின் காரணத்தால் தான் அந்தக் கட்சி இன்று அழிக்கப்படுகின்றது. அந்தவகையில் நான் இன்று கூற விரும்புவது என்னவெனில் தமிழ் மக்கள் மிகவும் இக்கட்டான கட்டத்தில் இருக்கின்றார்கள்.

ஜெனிவாத் தீர்மானத்தில் பொறுப்புக் கூறல் சம்மந்தமாக ஒரு பிரயோசனமும் இல்லை என்ற விடயம், ஜெனிவா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளது. இவ்வாறான நிலையிலும் கூட்டமைப்பினர் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனக் கோருகின்றனர்.

இவ்வாறு கூட்டமைப்பினர் செயற்படுகின்ற போது, மாவை சேனாதிராசா எங்களைப் பார்த்துக் கூறுகின்ற கருத்துக்கள் உண்மையில் கவலையளிக்கிறது. ஏன் எனில் அந்தளவு தூரத்துக்கு அவர் பலவீனமானதொரு இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார் என்பது தான் அதன் வெளிப்பாடு ஆகும்” என தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .