2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பல்கலைக்கழக மாணவர் படுகொலை விவகாரத்தில் பொலிஸார் பொய்த் தகவல்?

Yuganthini   / 2017 ஜூன் 27 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

 

யாழ்ப்பாணம் பல்லைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, நீதிமன்றுக்கு வழங்கப்பட்ட  முதல் தகவலில் பிழையானதும் உண்மைக்குப் புறம்பானதுமான தகவல்கள் அடங்கியுள்ளனவா என்பது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெறுவதாக, சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், நீதிமன்றில் இன்றுத் ​தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி, கொக்குவில் - குளப்பிட்டிப் பகுதியில் வைத்து, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 5 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படுகொலைச் சம்பவம் தொடர்பான  வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில், இன்று (27) விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சட்டத்தரணி சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

இந்த வழங்கு விசாரணையின் பின்னர், வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், மேலும் கூறியதாவது,

“விசாரணையின் போது, சாட்சியாளர்களை பொலிஸ் தரப்பினர் விசாரணை எனும் பெயரில் அச்சுறுத்தியது தொடர்பான அறிக்கை, மன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு  நீதவான் உத்தரவுப் பிறப்பித்திருந்தார்.

“மேலும், இவ்வழக்கின் முதலாவது சந்தேகநபர், குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற அன்றே, தனது தகவல் குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்தாகவும் மேலதிகாரிக்கும் அது தொடர்பாக தெரியப்படுத்தியதாகவும் மன்றுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

“இந்நிலையில், நீதிமன்றத்துக்கு பொலிஸார் வழங்கிய முதல் தகவலில், அது ஏன் மறைக்கப்பட்டு, உண்மைக்கு புறம்பான தகவல் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டது என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

“குறித்த விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு உகந்ததான அத்தனை உத்தரவுகளையும் கொடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் கோரியிருந்தோம். இதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த தவணை விசாரணையின் போது, குறித்த கட்டளையை நீதவான் வழங்குவார்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X