2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

பாடசாலைகளில் வடமாகாண கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கோரிக்கை

எம். றொசாந்த்   / 2018 மே 17 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண கொடியை எதிர்வரும் 18 ஆம் திகதி அரை கம்பத்தில் பறக்கவிடுமாறும், காலை 11 மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அகவணக்கம் செலுத்துமாறும் பாடசாலை அதிபர்களுக்கு வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் பணித்துள்ளார்.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில்,

“கடந்த 70 ஆண்டு காலமாக எமது உரிமைகளை வென்றெடுப்பதுக்காக அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத ரீதியிலும் நாம் போராடி வந்துள்ளோம்.

எமது ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி சர்வதேச சமூகத்தைப் பிழையாக வழிநடத்தி மௌனிக்கச் செய்யப்பட்டது.

கடந்த 30 ஆண்டு போராட்டத்தில் நாம் ஏராளமான இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுத்துள்ளோம். குறிப்பாக இறுதியாக எம்மக்கள் மீது நடைபெற்ற தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.

இந்நிலையில் எமது இனத்தின் உரிமைக்குரலுக்கான போராட்டம் இன்னமும் முற்றுப்பெறவில்லை என்பதையும், மடிந்துபோன எமது உறவுகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் இன்னமும் நீதி வழங்கப்படவில்லை என்பதையும் சர்வதேச சமூகத்துக்கு அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

மேலும், எமது உரிமைகளை வென்றெடுப்பதுக்கான வேள்வியில் ஆகுதியானவர்களை உணர்வுடன் நினைவுகூர வேண்டியது எம்மினத்தின் கடமையாகும். எனவே, எமது மக்களின் அபிலாசைகளை உயர்த்திப் பிடிக்கும் நிறுவனமாக வடக்கு மாகாணசபை திகழ்வதால், எமது மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு மாகாணசபையின் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் அன்று காலை 11 மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அனைவரும் அகவணக்கம் செலுத்துமாறும் அனைத்து அதிபர்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .