2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பாதை சேவையை சீரமைக்கவும்; ஆளுநரிடம் கோரிக்கை

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 11 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

காரைநகர் - ஊர்காவற்றுறை பாதைச் சேவையை சீராக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, இப்பாதையூடாக போக்குவரத்துச் செய்யும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இப்பாதைச் சேவை இடம்பெறாமையால் தாங்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை இவ்விடயத்தில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருக்கு அவர்கள் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“காரைநகர் மற்றும் வலிகாமம் மேற்கு, வலிகாமம்  தென் மேற்கு உள்ளிட்ட பல இடங்களில் இருந்து ஊர்காவற்றுறை, வேலணை மற்றும் தீவுப் பிரதேசத்தில் உள்ள அரச அலுவலகங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும், அதேபோன்று மேற்படி தீவகத்தில் இருந்து காரைநகர் மற்றும் இதர பிரதேசங்களில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் இப்பாதை ஊடாகவே பயணத்தை மேற்கொள்கின்றோம்.

“எரிபொருள் இன்மையைக் காரணம் காட்டி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பாதைச் சேவை இடம்பெறவில்லை. இக்காலத்தில் தனியார் படகுச் சேவை இடம்பெற்று வருகின்றது. இப்படகு மூலமான பயணம் ஆபத்துகள் நிறைந்தது என்பதுடன், எமது மோட்டார் சைக்கிள்களின் மக்காட், கண்ணாடி, சிக்னல் போன்றன அடிக்கடி உடைந்து சேதமடைகின்றன.

“மேலும், வாகன அடிச்சட்டமும் பாதிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிள்களை ஏற்றி இறக்கும்போது கீழே வீழ்ந்து உதிரிப்பாகங்கள் சேதமடைகின்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன. அத்துடன் இருவழிக் கட்டணமாக தினமும் 200 ரூபாய் பணம் செலுத்தவேண்டி உள்ளது.

“பயணிகள் சேவையில் ஈடுபடும் இ.போ.ச மற்றும் தனியார் பஸ்களுக்கு விசேட அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுவது போன்று பாதைக்கும் எரிபொருள் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். அத்தியாவசிய சேவையான பாதை ஒன்று இருக்கின்ற நிலையில் நாம் இவ்வாறு வீணான சிரமங்களை எதிர்நோக்குவது வேதனையானது.

எனவே, இவ்விடயத்தில் தாங்கள் அதிகூடிய கரிசனை எடுத்து பாதைச் சேவை தடையின்றி  சீராக நடைபெற ஏற்பாடு செய்வதன் மூலம் அரச உத்தியோகத்தர்களினதும் பொதுமக்களினதும் வீண் சிரமங்களுக்கும் பொருளாதார இழப்புக்களுக்கும் தீர்வு பெற்றுத்தருமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்”  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது..

இதன் பிரதிகள் யாழ். மாவட்டச் செயலாளர், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X