2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘பாலாவின் கைதை கண்டிக்கின்றோம்’

Editorial   / 2017 நவம்பர் 06 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கேலிச்சித்திரமொன்றுக்காக, ஊடகவியலாளரும் கேலிச்சித்திரக் கலைஞருமான பாலா, தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என, யாழ். ஊடக அமையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

“தமிழகத்தின் நெல்லையில், கந்துவட்டிக் கொடுமைக்கு, தீயில் கருகிப் பலியான இசக்கிமுத்து குடும்பம் தொடர்பாக விமர்சன கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் பாலா, சென்னை, போரூர் அருகே, பெரிய பணிச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து, நேற்று (05) பகல் 1.30 மணியளவில், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

“கார்டூனிஸ்ட் பாலா, கடந்த பல ஆண்டுகளாக குமுதம் வார இதழின் அதிகாரப்பூர்வ கார்டூனிஸ்டாக பணி புரிந்தவர். தற்போது சுயாதீனமான கார்டூனிஸ்டாகப் பணிசெய்து வரும் அவர், பல்வேறு பிரச்சினைகளிலும் தன் கருத்தை வலியுறுத்தி, கார்ட்டூன் வரைந்து வருகிறார்.  

“இலங்கையின் வட, கிழக்கு தமிழர் தாயகத்தில் தென்னிலங்கை அரசாங்கத்தாலும் அதன் துணைப்படைகளாலும் அரச முப்படைகளாலும் கொல்லப்பட்டும் காணாமலும் போயுள்ள 41க்கும் அதிகமான தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, யாழ். ஊடக அமையம் தொடர்ந்து போராடிவருகின்றது. 

“இந்நிலையில், இலங்கை அரசாங்கத்துக்குக் குறையாது இந்திய அரசாங்கத்தின் கண் முன்னால், ஊடகக் கொலைகளும் கைதுகளும் அரங்கேறத் தொடங்கியுள்ளன. 

“கௌரி லங்கேஸ், தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி என இந்தியா முழுவதும், அரசாங்கத்துக்கு எதிராக கருத்துகளை வெளியிடும் பத்திரிகையாளர்களும், முற்போக்காளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.  

“ஊடக சுதந்திரத்துக்கு குரல் கொடுத்தும் போராடியும் வருகின்றதோர் அமைப்பு என்ற வகையில் இந்தியக்கொலைகளையும் கைதுகளையும் யாழ். ஊடக அமையம் வன்மையாகக் கண்டிக்கின்றது” என்றுள்ளது.

எமது தொப்புள் கொடி உறவுகளது உரிமைக்குரலுக்கு கைகொடுக்கின்றது. அதிலும் பாலாவின் தூரிகைகள் ஈழத்துக்காக பல தடவைகள் அறச்சீற்றத்துடன் எழுந்து குரல் கொடுத்ததை நாம் மறந்து போக தயாராகவில்லை. 

“கார்ட்டூனிஸ்ட் பாலாவின் மீதான வழக்கை உடனடியாக திரும்பப் பெற்று அவரை விடுவிக்க வேண்டும். மேலும், சட்ட விதிகளை மீறி அராஜகமான முறையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

“ஜனநாயகத்தின் மீதும், மனித உரிமை மீதும், ஊடக சுதந்திரத்தின் மீதும் நம்பிக்கைக்கொண்டுள்ள தேசமாக இந்திய தேசம் உருவாக யாழ். ஊடக அமையத்தின் கோரிக்கைகள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகம் ஊடாக இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .